
India invited Myanmar's rebel group: இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவி வருகிறது. அந்த நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். அன்றில் இருந்து மியான்மரில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
மியான்மரில் அவசர நிலை
இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மியான்மரில் உள்ள பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுவினர் நாட்டை தங்கள் வசம் கொண்டு வந்தனர். பல்வேறு இடங்களில் ஆயுதம் ஏந்திய குழுவினர் ஆதிக்கம் செலுத்தி வருவதால் நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் வாழ வழியில்லாததால் அந்த நாட்டை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
கிளர்ச்சியாளர் குழுவை சந்தித்த மிசோரம் எம்.பி
இந்நிலையில், மிசோரம் எம்.பி. வன்லால்வேனா, இந்திய எல்லைக்கு அருகில் மியான்மரின் வடமேற்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் கிளர்ச்சிக் குழுவான சின்லாந்து கவுன்சிலுக்கு நடந்தே சென்று ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மிசோ தேசிய முன்னணியின் (MNF) ராஜ்யசபா எம்.பி.யான வன்லால்வேனா, நடந்தே மியான்மருக்குள் சென்று கிளர்ச்சிக் கவுன்சில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
கனடா மரம், கார் தேவையில்லை! டிரம்ப் அதிரடி வரி அறிவிப்பு!!
இந்தியாவுடன் சேர அழைப்பு
மியான்மரில் அதிகாரப்பூர்வ அரசாங்கம் இல்லாத நிலையில், இரு பிராந்தியங்களுக்கிடையேயான பிணைப்புகளை வலுப்படுத்துவது மிக முக்கியமானது என்பதை அவர் எடுத்துரைத்தார். மியான்மரில் நிலையான அரசு இல்லாத நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவின் மிசோரம் எல்லையை ஒட்டியுள்ள மியான்மர் பகுதியில் கிளர்ச்சிக் குழுவான சின்லாந்து கவுன்சில் தான் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், மிசோரமின் எம்.பி வன்லால்வேனா கிளர்ச்சிக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. சின்லாந்து கவுன்சில் கிளர்ச்சிக் குழுவிடம் பேசிய வன்லால்வேனா 'நீங்கள் தாராளமாக இந்திய யூனியனில் சேரலாம்' என்ற கோரிக்கையை அவர்களிடம் முன்வைத்துள்ளார். இரு நாட்டு எல்லைப்பகுதி மக்களின் இன மற்றும் கலாச்சார உறவுகளை வலியுறுத்திய வன்லால்வேனா, நட்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தினார்.
சமூக விரோதிகளும் ஊடுருவுகின்றனர்
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு மியான்மரின் சின்-குகி-சோ இனக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் மிசோரமில் அகதிகளாக வந்துள்ளனர். மிசோரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு உணவு மற்று தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மியான்மரில் இருந்து அகதிகள் வரும் நிலையில் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த அகதிகளின் போர்வையில் சில சமூக விரோதிகளும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி விடுகின்றனர்.
எல்லைப்பகுதியில் பாதுகாப்பு
இதனால் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையைப் பேணும் வகையில் 'இந்தியாவுடன் சேருங்கள்' என்று மியான்மர் கிளர்ச்சியாளர் அமைப்பிடம் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்ற ரீதியில் கிளர்ச்சியாளர் அமைப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிளர்ச்சியாளர் அமைப்புடன் தான் நடத்திய கலந்துரையாடல்களின் விவரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வெளியுறவு அமைச்சரிடம் விளக்க உள்ளதாக மிசோரம் எம்.பி. வன்லால்வேனா தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் Vs டொனால்ட் ட்ரம்ப் மோதல் வெடித்தது; பின்னணி என்ன?