'தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ - அமெரிக்க மக்களை அதிர்ச்சியடைய வைத்த டிரம்ப்

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 07:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
'தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ - அமெரிக்க மக்களை அதிர்ச்சியடைய வைத்த டிரம்ப்

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது, அமெரிக்க மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதேசமயம், அதிபர் வேட்பாளர்களுக்கான 3-ம் கட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், 52 சதவீத ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார்.

அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு குறைவான நாட்களே இருப்பதால், இருவரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிராசாரம் செய்து வருகின்றனர்.

3-ம்கட்ட விவாதம்

அதிபர் வேட்பாளர்களுக்கு ஏற்கனவே இரு கட்ட விவாத நிகழ்ச்சி  லாஸ் வேகாஸ் நகரில் உள்ள நிவேடா பல்கலையில் ேநற்றுமுன்தினம் இரவு நடந்தது. அந்த விவாதத்தில் ஹிலாரியும், டிரம்பும் கலந்து கொண்டனர். 

கைகுலுக்கவில்லை
சமீப காலமாக இருவரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், விவாதம் தொடங்கும் முன் ஒருவொருக்கு ஒருவர் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ளக்கூட முன்வரவில்லை. இந்த விவாத நிகழ்ச்சிக்கு பாக்ஸ் நியூஸ் செய்திச் சேனலின் கிறிஸ் வாலஸ் நெறியாளராக செயல்பட்டார்.

எதிர்ப்பேன்

முதலில் விவாதத்தைத் தொடங்கிய ஹிலாரி கிளிண்டன், "டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தை நான் வலுவாக எதிர்க்கிறேன். இந்த ஒப்பந்தத்தால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், வருவாய் உயரும், தேச பாதுகாப்புக்கு நலன் கிடைக்கும் என எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் நான் இந்த ஒப்பந்தத்தை இப்போது எதிர்ப்பது போலவே தேர்தலுக்குப் பின்னரும் எதிர்ப்பேன். ஒருவேளை அமெரிக்க அதிபரானாலும் எதிர்ப்பேன்.

அன்னியர்களுக்கு வேலை 

 டொனால்டு டிரம்ப் அமெரிக்க வேலைவாய்ப்புகளை வெளிநாட்டுக்குத் தாரை வார்த்துவிட்டு தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவருடைய நிறுவனங்கள் மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் பெற்று வருகிறது. மேலும், லாஸ் வெகாஸில் உள்ள அவரது விடுதிக்கு சீன ஸ்டீல் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டிரம்ப் முதலைக் கண்ணீர்..

இதனால் ஆதாயம் பெறுவது சீன தொழிற்சாலைகளேத் தவிர அமெரிக்க தொழிற்சாலைகள் அல்ல. இப்படி அமெரிக்க பொருளாதாரம், அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார் டிரம்ப்" என்று குற்றம் சாட்டினார். 

அனுமதித்திருக்கக் கூடாது

இதையடுத்து பேசிய டிரம்ப், “ அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட ஹிலாரியை அனுமதித்திருக்கக் கூடாது. அவர் போட்டியிடாமல் இருப்பதே நல்லது.  கிளிண்டன் கூடாரம் உங்கள் அனைவரையும் பொய்களால் துளைத்தெடுக்கப் போகிறது. அவருடைய ஒவ்வொரு தாக்குதலையும் ஊடகங்கள் ஆதரிக்கின்றன. அவருடைய ஊழல்களை காண மறுத்து பார்வையற்று இருப்பது போல் செயல்படுகின்றன '' என்றார்.

இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வீர்களா? என கேட்டபோது, அதற்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “ இதை சரியான நேரத்தில் தெரிவிப்பேன். இங்குள்ள ஊடகங்கள் அனைத்தும் நேர்மையற்ற முறையில் செயல்படுகின்றன. இதை வாக்காளர்கள் உணர வேண்டும். இந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்தால், அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்'' என்றார்.

கருத்துக்கணிப்பு

இவ்வாறாக ஹிலாரி, டிரம்ப் விவாதம் வழக்கமான காரசார குற்றச்சாட்டுகளுடன் முற்று பெற்றது. இறுதி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு, சி.என்.என். செய்தி நிறுவனமும் ஓஆர்சி கருத்துக்கணிப்பு நிறுவனமும் மேற்கொண்ட கணிப்பின்படி ஹிலாரி கிளிண்டனுக்கு 52 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 39 சதவீத ஆதரவும் மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

யாருக்கு வாய்ப்பு

மூன்று சுற்றுகளிலுமே ஹிலாரியே மக்கள் மத்தியில் முன்னிலை பெற்றிருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது. இந்தக் கணிப்பில் 4% அளவுக்கு முன்பின் மாறுதல்கள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கணிப்பு குறித்து கருத்து தெரிவிக்க டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை..! பாகிஸ்தானில் அமெரிக்கா -விரிக்கும் வலை..!
Energy Lockdown: ஈரான் போரால் உலகத்துக்கு புது சிக்கல்? 'எனர்ஜி லாக்டவுன்'னா என்ன தெரியுமா?