பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உயிருக்கு கடுமையாக போராடி வருவதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மூன்றி முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று காட் லாக்ப்பாட் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். உடல்நிலை காரணமாக அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைத்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே கடந்த சனிக்கிழமை நவாஸ் ஷெரிப்புக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவரின் நிலை சிறிது சிறிதாக மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறினர். இதனிடையே 3வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மேலும் மோசமடைந்து இருப்பதாக அவரின் குடும்ப மருத்துவர் அத்னன் கான் தகவல் வெளியிட்டுள்ளார்.
69 வயதான நவாஸ் ஷெரிப் பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படுகிறார். பாகிஸ்தானில் பஞ்சாப் என்ற மாநிலம் உள்ளது. நவாஸின் சிறுநீரகம் மோசமடைந்ததன் காரணமாக ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் அளவு ஆபத்தான முறையில் குறைந்திருப்பதாக மருத்துவர் அத்னன் கான் கூறியுள்ளார். ஒரே நாளில் பிளேட்லெட்களின் எண்ணிக்கை 45,000ல் இருந்து 25,000 ஆக குறைந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஷெரிபுக்கு தொடர்ந்து அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நவாஸ் ஷெரீப்பை தொடர்ந்து ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு பாகிஸ்தான் பிரதமரான ஷாகித் ககான் அபாஸியின் உடல்நிலையும் மோசமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அடலியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபாஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.