
அலறியடித்து ஓடியபடி தீயில் சிக்கி மாண்ட 22 சிறுமிகள்… கவுதமாலா நாட்டில் நெஞ்சை உருக்கும் சம்பவம்…
கவுதமாலா நாட்டில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் சமூக விரோதிகள் வைத்த தீயில் 22 சிறுமிகள் கருகி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் தென் மேற்கில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சான் ஜோஸ் பினுலா நகரில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அதே நேரத்தில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய இளைஞர்களும் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
400 பேர் மட்டுமே தங்கும் வசதியுள்ள இந்த காப்பகத்தில் 500 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள சிறுமிகள் காப்பக ஊழியர்களால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் அந்த காப்பகத்தில் தங்கி இருந்த இளைஞர்கள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது சில இளைஞர்கள் அங்குள்ள மெத்தைகளில் தீ வைத்து விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதில் தீ மளமளவென பரவியது. அங்கு தங்கி இருந்த சிறுமிகள் ஓலமிட்டவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர். எப்படியாவது தீயில் இருந்து தப்பிவிலாம் என அங்கும், இங்கும் ஓடிய சிறுமிகள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 22 சிறுமிகள் தீயில் சிக்கி கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 14 முதல் 17 வயதுக்குட்பட்ட அந்த சிறுமிகளின் உடல்கள் அடையாளம் காண இயலாத வகையில் கரிக்கட்டைகள் ஆகி விட்டன. 50 க்கும் மேற்பட்ட சிறுமிகள் படுகாயஅடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவம், நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் வெட்கக்கேடானது என்று உலம் முழுவதும் இருந்து கண்டனங்கள் வந்தள்ளன.