அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறை போர் விமானமான F-47ஐ ரகசியமாக சோதனை செய்து வருவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது உலகின் எந்த போர் விமானத்தையும் வெல்லும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறை போர் விமானத்தை ரகசிய சோதனை செய்து வருவதாகவும் விரைவில் அது பயன்பாட்டுக்கு வரவிருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்தப் புதிய போர் விமானம் F-47 என்று அழைக்கப்படும்.
புதிய ஜெட் விமானத்தின் பெயரில் 47 என்று இருப்பது அவர் அமெரிக்காவின் 47வது அதிபர் ஆகியிருப்பதைக் குறிக்கிறது. “இது ஒரு அழகான எண், F-47. இதற்கு முன்பு யாரும் பார்த்திராத ஒன்று. வேகம் முதல் சூழ்ச்சித்திறன் வரை ஒரு போர் விமானத்தின் அனைத்து பண்புகளையும் கொண்டிருக்கும். வேறு எந்த போர் விமானமும் இதற்கு அருகில் கூட வர இயலாது” என்று டிரம்ப் கூறினார்.
உலகின் முதல் ஐந்தாவது தலைமுறை போர் விமானமான F-22 ராப்டருக்குப் பதிலாக போயிங் இந்த அடுத்த தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் என்று டிரம்ப் கூறினார்.
F-47 ஜெட் விமானம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் அமெரிக்கப் போர் வீரர்களுக்கு முக்கியமான நாள் என்று பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். "எங்களிடம் F-15 உள்ளது. F-16, F-18, F-22, F-35 எல்லாம் உள்ளன. இப்போது எங்களிடம் F-47 விமானமும் உள்ளது," என்று அவர் கூறினார். "இது மிக நேரடியான, தெளிவான செய்தியைச் சொல்கிறது. நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம். வரவிருக்கும் தலைமுறை தடையின்றி உலகம் முழுவதும் அதிகாரம் செலுத்த முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.
CCA எனப்படும் ஆளில்லாத போர் விமானங்கள் புதிய விமானத்திற்கு "லாயல் விங்மேன்" ஆக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
F-47 விமானத்தை உருவாக்க போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் இடையே கடுமையான போட்டி காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இயங்கவும், சீனாவின் மிகவும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளுக்கு எதிராகவும் செயல்படவும் ஏற்ற வகையில் திறன்மிக்கதாக புதிய விமானம் உருவாகியுள்ளது.
குறிப்பாக, இது சீனாவை இலக்காகக் கொண்டது. சீனா ஏற்கெனவே திறமையான ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வைத்திருப்பதுடன், 6வது தலைமுறை போர் விமானத்தின் மாதிரிகளையும் சோதனை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் தனது அறிவிப்பில், விமானத்தின் சோதனை பதிப்பு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ரகசிய பயன்பாட்டில் இருந்து வருவதாகவும் கூறினார். "F-47 இதுவரை கட்டப்பட்ட மிகவும் மேம்பட்ட, மிகவும் திறமையான, மிகவும் ஆபத்தான விமானமாக இருக்கும். விமானத்தின் சோதனை கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ரகசியமாக நடந்து வருகிறது. இது வேறு எந்த நாட்டையும் வெல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்" என டிரம்ப் கூறினார்.