இந்திய எல்லையில் இந்திய நிலங்களை கைப்பற்றுவதற்கான கடுமையான மோதல்களில் சீனா ஈடுபட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்திய எல்லையில் மோதல், திபெத் மற்றும் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சீனா சர்வதேச ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவும், எனவே சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை அவசியம் எனவும் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, அதே நேரத்தில் அந்த வைரஸை பரப்பிய சீனா அதிலிருந்து மீண்டுள்ளதுடன் தனது ராணுவ பலத்தை பயன்படுத்தி அண்டை நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பிருந்தே வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான பனிப்போர் பகையாக உருவெடுத்துள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் சீனாவை எதிர்க்க வேண்டுமென்றும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அமெரிக்கா அறைகூவல் விடுத்து வருகிறது. தென்சீனக்கடல், தைவான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் விவகாரத்தில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.
இந்நிலையில் சீனாவின் நடவடிக்கையை அமெரிக்கா வெளிப்படையாக கண்டித்து வரும் நிலையில், சீனாவுக்கு எதிராக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவின் நடவடிக்கைகளும் அதன் ஆபத்துக்களும் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. சீனா வின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இது பிற நாடுகளின் இறையாண்மையை மீறும் செயல் எனவும், அந்த அறிக்கையில் அமெரிக்கா கண்டித்துள்ளது. கொரோனா வைரஸை கையாள்வதில் சீனா செய்த பிழைகள், சீனாவின் அடக்குமுறை நடவடிக்கைகள், அமெரிக்கா அந்த அறிக்கையில் தொகுத்து வழங்கியுள்ளது. அதேபோல் இந்திய எல்லையில் இந்திய நிலங்களை கைப்பற்றுவதற்கான கடுமையான மோதல்களில் சீனா ஈடுபட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
மொத்தத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச ஒப்பந்தங்களை மீறி, ஹாங்காங்கில் சிவில் உரிமைகளை மறுத்து வருகிறது என்றும், சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் திபெத்தில் ஆதிக்கம் போன்றவற்றின் மூலம் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் தொடர்ந்து அண்டை நாடுகளின் எல்லைகளில் சீன ராணுவத்தை அதிகரித்து போருக்கான நடவடிக்கைகளையும் தூண்டுகிறது என்றும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தென்சீனக் கடலில் உள்ள நாடுகளில் எல்லையில் சீனா அத்துமீறி அண்டை நாடுகளின் இறையாண்மையை அவமதித்து வருகிறது என்றும், அந்த அறிக்கையில் அமெரிக்கா குற்றஞ்சாட் டியுள்ளது. சீனாவை வலிமையாக எதிர்க்க ஒத்த சிந்தனை கொண்ட ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் பிற நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.