கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து உகான் நகரம் முற்றிலும் விடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பெரும் அச்சுறுத்தலை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ்,இங்கிலாந்து, சீனா என உலகின் 210 நாடுகளுக்கு பரவி வரும் வைரஸ் மனித இனத்திற்கு பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 29,94,761 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வைரஸின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,06,992 மக்கள் தங்கள் பலியாகியுள்ளனர். 19,08,949 மக்கள் தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவர்களில் 57,603 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் இனி வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
உலகையே இன்று முடக்கிப் போட்டு இருக்கும் கொடுமையான கொரோனா வைரஸ் முதன்முதலாக சீன நாட்டின் மத்திய நகரமான உகானில் தோன்றியது. அங்கிருந்து சீனா முழுவதும் பரப்பிய அந்நோய் சுமார் 82,830 பேரை தாக்கி 4,633 உயிர்களை பறித்தது. கொரோனாவின் தாக்குதலில் முற்றிலும் நிலைகுலைந்து போன சீனா கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு அதிலிருந்து மெல்ல மெல்ல மீளத் தொடங்கியது. மூன்று மாதங்களாக அங்கு அசுர வேட்டையாடி வந்த கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 3 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் வெளிநாட்டில் வந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனால் சீன மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். எனினும் அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் பலி எண்ணிக்கையில் 84% உகான் நகரில் ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 50,033 மக்கள் பாதிக்கப்பட்டு 3,869 கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக உகான் நகரம் முழுவதும் கடந்த 3 மாதங்களாக முடக்கப்பட்டது. தீவிர நடவடிக்கைகளால் சிறிது சிறிதாக குறைந்து வந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது முழுவதும் நீங்கியுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து உகான் நகரம் முற்றிலும் விடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி தான் 76 நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கு உகானில் விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.