சீனாவில் பூனைகளிடம் வேகமாக பரவும் கொரோனா..!! சிறந்த தலைமைத்துவம் இல்லை என WHO கவலை..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2020, 4:26 PM IST
Highlights

மனிதனிடத்தில் பரவிய வைரஸ் தற்போது  விலங்குகளையும் பாதித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. 

இது ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இந்த வைரஸை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் உலக நாடுகளின் மத்தியில் கொரோனா வைரசுக்கு எதிரான தலைமைத்துவமும், ஒற்றுமையும் இல்லாதது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்துவதாக உலக சுகாதார  அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் வேதனை தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு வேறுபாடுகளினால் பிரிந்து நிற்பதினால் வைரஸ் தொற்று அதிகமாக பரவுகிறது எனவும், ஒன்றாக இணைவதன் மூலம் அதை விரைவில் தோற்கடிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி தற்போது 180 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 35 தடுப்பூசிகள் மனித பரிசோதனைகளில் உள்ளன. லண்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் மனித பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தப் பரிசோதனை நிறைவுபெற்று அது மனித பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும்  அஸ்ட்ராஜெனேகா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் உலக அளவில் கொரோனாவை எதிர்த்துப் போராட உலக சுகாதார அமைப்புக்கு 35 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது, எனவே அதை வழங்க நாடுகள் முன்வர வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியா குட்ரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நீதி கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சை திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் என்றும், இதில் அடுத்த 15 மாதங்களுக்கு 15 பில்லியன் வழங்கப்படும் என்றும்  கூறியுள்ளார்.

பூனைகளுக்கு கொரோனா

உலகம் முழுவதும் மனிதர்களை வேகமாக தாக்கி வரும் இந்த வைரஸ் தற்போது விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை, சீனாவில் ஹூஜோங் வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது முகாமில் உள்ள 102 பூனைகளின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் 15 பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதனிடத்தில் பரவிய வைரஸ் தற்போது  விலங்குகளையும் பாதித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. 

சீன தடுப்பூசி 

சீனா தனது முதல் நாசி கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்த மருத்துவ பரிசோதனையின் முதல் கட்டம் நவம்பரில் தொடங்கும் என்றும், அதேநேரத்தில் ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டிருப்பதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரித்துள்ளது. இருப்பினும் விஞ்ஞானிகள் இது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்றும், எந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சியிலும் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்புதான் எனவும் WHO கூறியுள்ளது. சீனாவின் இந்த முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் 100 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த தடுப்பூசியை ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமேன் பல்கலைக்கழகம் மற்றும் பீஜிங்கில் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவை தயாரித்துள்ளன. இதற்கான சோதனை சுமார் ஒரு வருடத்தில் முடிவடையும் என்றும், ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யூயென் குவோக் - யுங் கூறியுள்ளார். இந்த தடுப்பூசி இரட்டை பாதுகாப்பை வழங்கும், அதாவது இன்ஃப்ளூயன்சா மற்றும் நாவல் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்கக் கூடியது என தெரிவித்துள்ளனர். 

 

click me!