
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள COP30 என்ற ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மக்களின் ஆரோக்கியத்தை முன்வைத்து பருவநிலை மாற்றம் சார்ந்த முடிவுகளை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரும் நவம்பர் 10 முதல் 21 வரை பிரேசிலில் பெலெம் நகரில் COP30 மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நவம்பர் 7 அன்று நடந்த COP30 தலைவர்கள் மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், பருவநிலை நெருக்கடி என்பது எதிர்காலப் பிரச்சினை அல்ல, தற்போது இருக்கும் ஒரு சுகாதார நெருக்கடி என்றார்.
"நம்முடைய இந்த பூமி ஒரு நோயாளியாக இருந்தால், அது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருக்கும். அதன் முக்கிய அறிகுறிகள் கவலை அளிக்கின்றன. சராசரி உலக வெப்பநிலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, பூமி கடுமையான காய்ச்சலில் இருக்கிறது. கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் காடுகள் அழிக்கப்படுவதால், அதன் நுரையீரல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பூமியின் உயிர்நாடியாகக் கருதப்படும் பல நீர் ஆதாரங்கள் மாசடைந்துள்ளன." என்று அவர் விவரித்தார்.
"பூமி நோய்வாய்ப்பட்டதாக இருந்தால் மக்களும் நோய்வாய்ப்படுவார்கள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
COP30-ஐ நடத்துவதற்காக பிரேசிலுக்கு நன்றி தெரிவித்த கெப்ரேயஸ், தனது 'X' சமூக ஊடகப் பதிவிலும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
"ஒவ்வொரு பருவநிலை முடிவிலும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நிதியைப் பயன்படுத்த வேண்டும். ஆரோக்கியமே பருவநிலை இலக்குகளின் வெற்றிக்கு அளவுகோலாக இருக்க வேண்டும்." என அவர் குறிப்பிட்டார்.
பருவநிலை நடவடிக்கைக்கு அடிப்படையாக சுகாதாரத்தைக் குறிப்பிட்ட அவர், 'ATACH' (Alliance for Transformative Action on Climate and Health) என்ற கூட்டமைப்பு மூலம் உலக சுகாதார அமைப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டமைப்பு, பருவநிலைக்கு உகந்த மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சுகாதார அமைப்புகளை உருவாக்க உதவுகிறது.