
சீனாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆறுகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது, ஆங்காங்கே கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர், கிட்டத்தட்ட 61 பேர் வெள்ளத்திற்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே சீனா சின்னாபின்னமாகி உள்ளநிலையில், மழை வெள்ளம் அந்நாட்டை மொத்தமாக புரட்டி போட்டுள்ளது. சீனாவின் தெற்கு மற்றும் மத்திய சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜூன்-2 முதல் ஏற்பட்ட தொடர்மழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக, சுமார் 2,28,000 பேர் அவசரகால தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என அந்நாட்டின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு சீனாவில் கடுமையான வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், சீனாவில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது, ஆங்காங்கே ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், 12-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்ட சேத கணக்கெடுப்பின்படி சுமார் 1,300-க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது எனவும், சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. குவாங்சியின் தெற்குப் பிராந்தியத்தில் வெள்ள பாதிப்பு மோசமாக இருந்து வருவதால் அங்கு மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளார். அதேபோல் வடக்கு யுனான் மாகாணத்தில் வெள்ளத்தில் ஒரு நபர் காணாமல் போயுள்ளார், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனா வெள்ளம் குறித்து அரசுக்கு சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வான்வழி புகைப்படங்கள் குவாங்சி பிராந்தியத்தில் குய்லின் நகரத்தில் சில பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதை காட்டுகிறது, தொடர்ச்சியாக மழை பெய்ததால் லிஜியாங் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது. அதன் உச்சநிலை நீர்மட்டம் 146. 49 மீ அதாவது (160 கெஜம்) ஆகும், எச்சரிக்கை கோட்டிலிருந்து அரை மீட்டர் உயரத்தில் வெள்ளம் வழிந்தோடியதாகவும் கூறப்படுகிறது. மழைக்காலத்திற்கு பிறகு எட்டு பிராந்தியங்களில் 110 ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பருவகால வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் போதும் யாங்சே மற்றும் பியர்ல் நதி போன்றவற்றில் பெரும் சேதம் ஏற்படுத்துவது வழக்கம் என தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் மிக மோசமான வெள்ளம் 1998 இல் ஏற்பட்டது எனவும் அதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேறபட்ட மக்கள் இறந்தனர் என்றும் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.