#UnmaskingChina: இந்தியாவை சுற்றி வளைத்த சீனா..!! பாகிஸ்தான் ,நேபாளம் வரிசையில் இப்போது இந்த நாடும்..??

By Ezhilarasan Babu  |  First Published Jun 20, 2020, 5:19 PM IST

இது பங்களாதேஷிற்கு வரிச்சலுகை அளிக்கும் ஒரு நடவடிக்கை என கருதப்பட்டாலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சீனா அணிசேர்ந்து வரும் நிலையில், அந்த வரிசையில் பங்களாதேஷையும் இணைப்பதற்கான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
 


பங்களாதேஷிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 97 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்த வரிவிலக்கு மூலம் கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ள பங்களாதேஷின் பொருளாதாரம் மீள ஒருவாய்ப்பு இது என அந்நாடு கருத்து தெரிவித்துள்ளது. இதன்மூலம் பெய்ஜிங்- டாக்கா இடையிலான உறவு வலுவடைந்து இருப்பதாகவும் பங்களாதேஷ் கூறியுள்ளது. இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது,  ஜூன்-15ஆம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேபோல் இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் 35 சீனர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சீனா அதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதாவது தங்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரத்தை  கூறவில்லை. ஜூன்-15 வன்முறை மோதல் இருநாட்டுக்கும் இடையே பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

சீனாவின் இந்த வன்முறை தாக்குதலை இந்தியா கண்டித்துள்ளதுடன், தொடர்ந்து சீண்டினால் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது என மோடி எச்சரித்துள்ளார். ஆனால் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு இந்திய ராணுவத்தினரே காரணம் என குற்றம் சாட்டியுள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் சீன எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதற்கு சீன ராணுவம் பதிலளித்தாகவும் தடாலடியாக பொய்ப்பிரச்சாரம் செய்துவருகிறது. மேலும் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும்,  சீனாவைப் போன்றே பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் அத்துமீறி  வருவதாகவும் இந்தியாவுக்கு எதிராக  பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மேலும் இதேநிலை தொடர்ந்தால் சீனா, பாகிஸ்தான், நேபாளம் என மும்முனை தாக்குதலுக்கு இந்தியா ஆளாகக் கூடும் எனவும் அது எச்சரித்துள்ளது. இந்நிலையில்தான் இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பங்களாதேஷையும் தன்னுடைய கைப்பாவையாக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. அதாவது, பல ஆண்டுகளாக பங்களாதேஷ் தன்னுடைய ஏற்றுமதி  பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டுமென சீனாவிடம் கோரிவந்த நிலையில், தற்போது சீனா அதிரடியாக பங்களாதேஷ் ஏற்றுமதி  செய்யும் 97% பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பதாக கூறியுள்ளது. 

இது சீனா பங்களாதேஷ் இடையேயான ராஜதந்திர நடவடிக்கை என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். சீனாவின் இந்த அறிவிப்பின் மூலம் மீன்வளம் மற்றும் தோல் தயாரிப்புகளை உள்ளடக்கிய 97% பொருட்களுக்கு சீனா கட்டண விலக்கு அளித்துள்ளது, covid-19தொற்று நோயால் அதிகரித்துள்ள பொருளாதார  நெருக்கடியில் இருந்து மீள இது நல்ல வாய்ப்பாக அமையும், சீனா-பங்களாதேஷ் இடையேயான உறவு மேம்படும் என இந்த அறிவிப்பு குறித்து பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பங்களாதேஷ் பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என கடிதம் எழுதியிருந்த நிலையில், சீன தேசிய கவுன்சில் கட்டண ஆணையம் ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக கூறியுள்ளது.  குறைந்த  வளரும் நாடுகளின் பட்டியலில் பங்களாதேஷ் உள்ளதால் சீனா இந்த சலுகை வழங்கியுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான  முகமது துஹிதுல் இஸ்லாம் அறிவித்துள்ளார். இது பங்களாதேஷிற்கு வரிச்சலுகை அளிக்கும் ஒரு நடவடிக்கை என கருதப்பட்டாலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சீனா அணிசேர்ந்து வரும் நிலையில், அந்த வரிசையில் பங்களாதேஷையும் இணைப்பதற்கான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
 

click me!