
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இன்று அதிகாலை இந்தியாவின் முப்படைகளும் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலும், பழிக்குப் பழியும்:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாயினர். இது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகளை இந்தியா அறிவித்தது. பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது. இதனால், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் குடிநீருக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தது. இது போருக்கான அழைப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு தகவல் கொடுத்த இந்தியா
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இன்று அதிகாலை இந்தியாவின் முப்படைகளும் அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு தகவல் தெரிவித்து இருந்தது.
தற்போது சீனாவும் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. "இன்று அதிகாலை பாகிஸ்தான் மீது இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிக்கிறது. நடந்து வரும் நிலைமை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும். அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகளும் கூட. சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்படவும், அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்'' என்று இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.