சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் ஆய்வாளர் யூ டெங்ஃபெங், சீனாவிலுள்ள உயிரியல் ஆய்வகத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸின் மாதிரிகளை சீனா அழித்துவிட்டது என கூறியுள்ளார் ,
கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் , ஆரம்பகட்ட கோவிட்-19 மாதிரிகளை சீனா அழித்துவிட்டதாக சீன சுகாதார ஆணையத்தின் அதிகாரி கூறியிருக்கும் தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதன் மூலம் அமெரிக்கா சீனா மீது வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ற சந்தேகம் வலுத்துள்ளது . கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவை முற்றிலுமாக நிலைகுலையச் செய்துவிட்டது . இதனால் தன் மொத்த கோபத்தையும் சீனா மீது வெளிப்படுத்தி வரும் அமெரிக்கா கொரோனா வைரசுக்கு சீனாதான் காரணம் என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது .
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கசிந்தது , அந்த வைரஸை சீனா தெரிந்தோ தெரியாமலோ கசிய விட்டிருக்கலாம் ஆனால் அது அந்நாட்டில் பரவியபோது அது தொடர்பான தகவலை உலக நாடுகளுக்கு எச்சரிக்கை தவறிவிட்டது . இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை , ஆனாலும் இது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது . அதுமட்டுமின்றி உலகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் பேரழிவுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்றும் சர்வதேச வல்லுநர் குழு ஒன்று சீனாவுக்குச் சென்று வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வுக் குழுவை சீனா தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டுமென்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இது குறித்து கடந்த மாதம் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சீனா கொரோனா மாதிரிகளை அழித்து விட்டது என குற்றம் சாட்டினார் .
அதுமட்டுமின்றி , வைரஸ் பரவியது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உலக சுகாதார நிறுவனமும் வைரஸ் பரவும் தகவலை மூடி மறைத்துவிட்டது என பாம்பியோ குற்றம்சாட்டினார் . சீனாவில் ஒவ்வொரு மாகாணத்திலும் வைரஸ் பரவும் வரை தொற்று பரவலை சீனா ரகசியமாக வைத்திருந்தது. இதற்கு தங்களிடம் பல ஆதாரங்கள் உள்ளன என அவர் கூறியிருந்தார் . இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் , சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் ஆய்வாளர் யூ டெங்ஃபெங், சீனாவிலுள்ள உயிரியல் ஆய்வகத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸின் மாதிரிகளை சீனா அழித்துவிட்டது என கூறியுள்ளார் , அந்த மாதிரிகளை மறைப்பதற்காக அப்படி செய்யவில்லை உயிரியல் ஆய்வகத்தின் பாதுகாப்பிற்காக அவைகள் அழிக்கப்பட்டுள்ளன . மேலும் அந்த ஆய்வகத்தில் மாதிரிகளை அதிகாரபூர்வமாக வைக்க முடியவில்லை எனவே சீன பொதுசுகாதார சட்டத்தின்கீழ் மாதிரிகள் அழிக்கப்பட வேண்டியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார் .
அவரின் இந்த தகவல் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது . அப்படியெனில் சீனா மீது இதுவரை அமெரிக்கா கூறிவந்த குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மைதானா என்ற சந்தேகம் வலுத்துள்ளது , ஏற்கனவே சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க முன்வந்துள்ள நிலையில் தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் இந்த தகவல் மேலும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது .