செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தலைக்கு அருகில் வைத்து பாடல் கேட்டபோது செல்போன் வெடித்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தலைக்கு அருகில் வைத்து பாடல் கேட்டபோது செல்போன் வெடித்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தான் நாட்டின் பாஸ்டோப் நகரை சேர்ந்தவர், சிறுமி ஆல்வா அசெட்கிசி (14). பள்ளி மாணவியான இவர் இசை கேட்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் இரவில் செல்போனில் பாடல் கேட்டுக்கொண்டே தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல இரவு செல்போனில் பாடல் கேட்டபடியே தூங்க சென்றார். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால் ‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை தலைக்கு அருகில் தலையணையிலேயே வைத்துக்கொண்டு தூங்கிவிட்டார். தலைக்கு அருகிலேயே செல்போன் வெடித்ததால் பலத்த காயம் அடைந்த ஆல்வா படுக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது, சிறுமியின் தலையணை அருகே செல்போன் வெடித்து சிதறி கிடந்தது. இதனை கண்ட பெற்றோர் உடனே சிறுமியை தூக்கிக்கொண்டு அலறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் செல்போன் சார்ஜ் அதிகப்படியாக வெப்பமாகி பேட்டரி வெடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு என போலீசார் வழக்கை முடித்துவைத்துள்ளனர்.