ரஷ்ய தங்கம் இறக்குமதிக்கு தடையா? ஜி7 உச்சி மாநாட்டில் விவாதம்… அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!!

By Narendran SFirst Published Jun 26, 2022, 6:37 PM IST
Highlights

ஜெர்மனியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெர்மனியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. கீவின் மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை ரஷ்யாவின் ஏவுகணைகள் தாக்கின. இதனால் தீ விபத்து ஏற்பட்டது மற்றும் உக்ரேனிய தலைநகரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐவர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அருகிலுள்ள குழந்தைகள் பள்ளியும் தாக்கப்பட்டதாக அவர் கூறினார். நாட்டின் கிழக்கில் ரஷ்ய தாக்குதலைத் தடுக்கும் வகையில் உக்ரைனுக்கு அதிகமான மேற்கத்திய பீரங்கிகளை வழங்குவதால் வார இறுதியில் புதிய தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது.

நேற்று ரஷ்யா 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரேனிய இலக்குகளை நோக்கி வீசியது, இதில் சில பெலாரஸிலிருந்து ஏவப்பட்டன, அங்கு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உக்ரைன் படையெடுப்பை ஆதரித்தார். உக்ரைனின் உள் விவகார அமைச்சரின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்செங்கோ, இன்று கியேவைத் தாக்கிய குரூஸ் ஏவுகணைகள் காஸ்பியன் கடலுக்கு மேல் பறந்த குண்டுவீச்சாளர்களிடமிருந்து ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனிடையே உக்ரேனிலிருந்து கோதுமை ஏற்றுமதியைத் தடுக்க ரஷ்யா முயல்வதால், பணவீக்கத்தை அதிகரித்து, உலகளாவிய உணவுப் பற்றாக்குறை குறித்த அச்சத்தைத் தூண்டிய போரை முடிவுக்குக் கொண்டுவர கிரெம்ளின் மீதான அழுத்தத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று விவாதிக்க G7 தலைவர்கள் ஜெர்மனியில் கூடிவருகின்றனர். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளிப்பது பற்றி விவாதிக்க G7 தலைவர்கள் ஜெர்மனியில் கூடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த தாக்குதலை புதின் நிகழ்த்தியுள்ளார். இதனிடையே பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ரஷ்யத் தங்க ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன.

அந்தத் தடையால் ரஷ்யாவில் அரசியல் செல்வாக்குள்ள பெருஞ் செல்வந்தர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவர் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். அனைத்துலகத் தங்க வர்த்தகத்தில் லண்டனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் தடையின் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும் என்று பிரிட்டன் குறிப்பிட்டது. தங்கம், ரஷ்யாவின் ஆகப் பெரிய ஏற்றுமதிகளில் ஒன்று. சென்ற ஆண்டு ரஷ்யத் தங்க ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 15.5 பில்லியன் டாலர். ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க அங்குள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைத் தங்கத்திற்கு மாற்றி வருகின்றனர். இதற்கிடையே, ஜெர்மனியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார். 

மேலும் படிக்க: ஜெர்மனியில் கூடுகிறது ஜி7 உச்சி மாநாடு… உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்… யாரை மிரட்டுகிறார் புடின்?

மேலும் படிக்க: G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி வந்தடைந்தார்...உற்சாக வரவேற்பு...

click me!