
கனடா நாட்டின் அடுத்த பிரதமராகிறார் மார்க் கார்னி. இந்தியாவுக்கும், கனடாவுக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் லிபரல் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் உயர் பதவிக்கு வருவது உற்று கவனிக்கப்படுகிறது.
Canada Election 2025: மார்க் கார்னி, பியர் பொய்லிவ்ரே:
பியர் பொய்லிவ்ரே கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர். மார்க் கார்னி மற்றும் பியர் பொய்லிவ்ரே இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று கனடா நாட்டு மக்கள் தங்களது அடுத்த பிரதமரை தேர்வு செய்ய இருக்கின்றனர். கனடா நாட்டின் நீண்ட கால பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். சமீபத்தில் இவர் பதவி விலகிய நிலையில், இன்று தேர்தல் நடக்கிறது.
கார் மோதல் 12 பேர் உயிரிழப்பு:
நேற்று இரண்டு கட்சிகளின் தரப்பிலும் வாக்குகளை பெறுவதற்கான இறுதி முயற்சிகள் நடந்தன. ஆனால் பிரச்சாரத்தின் இறுதியில் வான்கூவரில் ஏற்பட்ட மோசமான கார்-மோதல் விபத்தினால் சிக்கல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிலிப்பைன்ஸ் தெருவில் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கும்போது, திடீரென புகுந்த கார் ஒன்று மக்கள் மீது மோதியது. இதில், 12 பேர் கொல்லப்பட்டனர். விசாரணையில் கார் ஓட்டி வந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
கருத்துக்கணிப்பு நிலவரம்:
இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடந்து வந்த கருத்துக் கணிப்புகளில் பிரதமர் கார்னி சிறிது முன்னிலை வகிக்கிறார், ஆனால் பியர் பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி சமீபத்திய நாட்களில் பின்தங்கி வருகிறது. கனடாவின் பிரதமராக கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் பணியாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது ராஜினாமாவை அறிவித்தார் . கட்சியில் ஏற்பட்ட உட்பூசல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக, அவர் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டதால் ராஜினாமா முடிவை எடுக்க நேரிட்டது.
கனடாவுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பு:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் கனடாவின் மீது விமர்சனங்களை முன் வைத்தார். அதாவது, அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடாவை இணைப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும் கனடா நாட்டின் மீது பெரிய அளவில் வரி விதிப்பை மேற்கொண்டார். இந்த நிலையில் தான் ஜஸ்டின் ட்ரூடோ தனது ராஜினாமாவை அறிவித்து இருந்தார்.
மார்க் கார்னி யார்?
ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிவிப்பு லிபரல் கட்சிக்குள் தலைமைப் போட்டியை உருவாக்கியது. கனடா வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கிகளின் முன்னாள் ஆளுநரான மார்க் கார்னி பணியாற்றியவர். ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமாவுக்குப் பின்னர் கனடா நாட்டின் பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால், உடனடியாக அவருக்கு எதிராக எதிர்ப்பும் கிளம்பியது. தேர்தலை அறிவிப்பதற்கு முன்பு ஒன்பது நாட்கள் மட்டுமே அந்தப் பதவியில் கார்னி இருந்தார்.
பிரதமர் களத்தில் முக்கிய போட்டியாளர்கள்:
மார்க் கார்னி (லிபரல் கட்சி): ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து பிரதமராக கார்னி பொறுப்பேற்றார். கனடா வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கி இரண்டின் முன்னாள் ஆளுநரான கார்னி, தனது பொருளாதார நிபுணத்துவத்தின் அடிப்படையில் போட்டியிடுகிறார். கனடா நாட்டின் பொருளாதார சிக்கலை எளிதில் கையாளுவார் என்ற நம்பிக்கை இவர் மீது ஏற்பட்டு இருக்கிறது.
பியர் பொய்லிவ்ரே (கன்சர்வேடிவ் கட்சி):
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான பொய்லிவ்ரே, எதிர்க்கட்சியின் முக்கிய போட்டியாளராக உருவெடுத்துள்ளார். கனடா நாட்டின் பண வீக்கம், பொருளாதார சிக்கலை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து வருகிறார். இவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கனடா நாட்டின் எம்பியாக இருந்து வருகிறார்.