10 வயதுக்கும் குறைவான சிறுமிகளைக் கூட ரஷிய வீரர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் பெண்களின் உடல்களில் தீக்காயங்களை ஏற்படுத்தும் வகையிலான நாஜி முத்திரையைக் குத்தியதாகவும் உக்ரைன் எம்பி லெசியா வாசிலென்க் கூறியுள்ளார்.
உக்ரைன் - ரஷியா போர் :
உக்ரைன் போர் காரணமாக ரஷியா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதேபோல பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையிலும், அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் இருந்தது.
இந்தச் சூழலில் கடந்த வாரம் துருக்கியில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து உக்ரைனில் இருக்கும் ராணுவத்தை ரஷியா குறைத்துக் கொண்டுள்ளது. இருந்த போதிலும், போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
போர் செய்திகளை சேர்க்க சென்ற 18 பத்திரிக்கையாளர்களை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கலாச்சாரம் மற்றும் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர், எட்டு பேர் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மூன்று பத்திரிக்கையாளர்களை இன்னும் காணவில்லை எனவும் உக்ரைன் அமைச்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கொடூர சம்பவங்கள் :
ரஷிய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அல்பேனிய பிரதமர் எடிராமா தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூர குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் பொதுமக்கள் மீதான தாக்குதல் தமது நாட்டில் நடைபெற்ற போரை நினைவு படுத்துவதாக கொசோவோ பிரதமர் அல்பின்குர்தி குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டு உள்ளது. இந்தச் சூழலில், 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளைக் கூட ரஷிய வீரர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் பெண்களின் உடல்களில் தீக்காயங்களை ஏற்படுத்தும் வகையிலான நாஜி முத்திரையைக் குத்தியதாகவும் உக்ரைன் எம்பி லெசியா வாசிலென்க் கூறியுள்ளார். இந்த செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.