பாபாசாகேப் அம்பேத்கரின் இந்தச் சிலை அவரது சிந்தனைகளைப் பரப்புவதற்கு மட்டுமின்றி சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக விளங்கும்.
இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பியான பி. ஆர். அம்பேத்கருக்கு இந்தியாவிற்கு வெளியே மிக உயரமான சிலை அமெரிக்காவின் மேரிலாந்தில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
19 அடி உயரம் கொண்ட இந்தச் சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' (Statue Of Equality) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அம்பேத்கர் சர்வதேச மையத்தின் (ஏஐசி) சார்பில் நிறுவப்படும் இந்த அம்பேத்கர் சிலை மேரிலாந்தின் அக்கோகீக் நகரில் வாஷிங்டனுக்கு தெற்கே சுமார் 35 கிமீ தொலைவில் 13 ஏக்கர் நிலத்தில் அமைகிறது.
undefined
"இந்தியாவுக்கு வெளியே பாபாசாகேப்பின் மிகப்பெரிய சிலை இதுவாகும். இந்த மையத்தில் கட்டப்படும் அம்பேத்கர் நினைவகத்தின் ஒரு பகுதியாக சிலை நிறுவப்பட்டுள்ளது" என்று அம்பேத்கர் சர்வதேச மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 14, 1891 இல் பிறந்த பாபாசாகேப் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சபை வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார். இதனால் இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி எனப் போற்றப்படுகிறார். சுதந்திரத்திற்குப் பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அமைந்த முதல் மத்திய அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்தார். தலித்துகள் மற்றும் தீண்டத்தகாதவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய சமூக இயக்கங்களில் அம்பேத்கர் முக்கியப் பங்காற்றினார்.
அம்பேத்கர் டிசம்பர் 6, 1956 அன்று காலமாவதற்கு முன் புத்த மதத்தைத் தழுவினார். அதைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 14ஆம் தேதி தம்ம சக்ர பரிவர்த்தன் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த அக்டோபர் 14ஆம் நாளில் மேரிலாந்தில் சிலை திறக்கப்பட்ட உள்ளது.
இந்த சிலையை புகழ்பெற்ற சிற்பி ராம் சுதார் உருவாக்கியுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை உருவாக்கியவரும் இவர்தான்.
"அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான அம்பேத்கரிய இயக்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள்" என்று ஏ.ஐ.சி. அமைப்பு கூறுகிறது. இந்த நினைவுச்சின்னம் பாபாசாகேப்பின் சிந்தனைகளைப் பரப்புவதற்கு மட்டுமின்றி சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக விளங்கும் எனவும் அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கூகுள் பிக்சல் 8 மொபைல் இன்று ரிலீஸ்; ட்ரெண்டை மாற்றப்போகும் வெப்பநிலை சென்சார்!