ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவருக்கு சீனா மரண தண்டனை..!! துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்ற திட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 13, 2020, 5:48 PM IST
Highlights

மரணதண்டனையை உலகளவில் ஒழிப்பதை ஆஸ்திரேலிய ஆதரிக்கிறது. எனவே எங்களுக்கு கிடைக்கும் அனைத்து வழிகளிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எங்கள்  இலக்கை அடைய நாங்கள் கடமையாற்றுவோம். 

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கொன்றில் ஆஸ்திரேலிய நாட்டைச்  சேர்ந்த நபருக்கு சீனா மரண தண்டனை விதித்துள்ளது. இது ஆஸ்திரேலிய நாட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் சீனா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே பனிப்போர் உருவாகியுள்ளது. அதாவது சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். 150 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் உலக அளவில் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவே இந்த வைரசுக்கு  காரணம் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி  வரும் நிலையில், அதன் நட்பு நாடான ஆஸ்திரேலியாவோ கொரோனா விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியதுடன், சீனாவுக்கு எதிரான தீர்மானத்தை உலக சுகாதார நிறுவன கூட்டத்தில்  முன்மொழிந்துள்ளது. 

இதனால் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மறைமுகப் பனிப்போர் ஏற்பட்டுள்ளது, இந்நிலையில்தான்  சீனாவுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த நபருக்கு சீனா மரண தண்டனை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த  கர்ம் கில்லெஸ்பி என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தெற்கு சீன நகரமான குவாங்சோவில் உள்ள பையூன் என்ற விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானம் ஏற முயன்றார். அப்போது அங்கிருந்த குடியுரிமை அதிகாரிகள்  கில்லெஸ்பியின் உடமைகளை சோதனையிட்டனர் அப்போது அவர் 7.5 கிலோ கிராம் அளவுக்கு மெதம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், குவாங்சோ இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு கில்லெஸ்பிக்கு சிறைத் தண்டனை விதித்ததுடன், அவரின் தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அதற்கான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை, கில்லெஸ்பிக்கு  சீன நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம், நிச்சயம் அவருக்கு ஆஸ்திரேலிய தூதரகம் சார்பில் உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளதுடன்,  பொதுவாக ஆஸ்திரேலியா மரண  தண்டனைக்கு எதிரான நாடு,  எல்லா மக்களுக்குமான மரண தண்டனையை ஆஸ்திரேலியா எதிர்த்துவருகிறது. மரணதண்டனையை உலகளவில் ஒழிப்பதை ஆஸ்திரேலிய ஆதரிக்கிறது. எனவே எங்களுக்கு கிடைக்கும் அனைத்து வழிகளிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எங்கள்  இலக்கை அடைய நாங்கள் கடமையாற்றுவோம்.  எங்கள் தனிப்பட்ட கோரிக்கைக்காக இதை நாங்கள் முன்வைக்கவில்லை என  தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளை விட போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்கு சீனா மரணதண்டனை வழங்கிவருவது  வழக்கமான ஒன்றாக உள்ளது. மேலும் அங்கு மரண தண்டனை துப்பாக்கிச் சூடு மூலம் நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

click me!