
இந்திய வம்சாவளியைச் சேந்த லியோ வரத்கர் அயர்லாந்து பிரதமராக தேர்வாக இருப்பதால், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மருத்துவரான லியோ வரத்கர். அயர்லாந்தின் ஆளும் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அயர்லாந்தின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அயர்லாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்க இருக்கிறது. பைன் கேயல் கட்சியைச் சேர்ந்த இவர் வெற்றிபெற்றதை நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
லியோ வரத்கரின் தந்தை அசோக் வரத்கர் இந்தியர். தாய் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த செவிலியர். அசோக் வராத்கரின் சொந்த ஊர் மராட்டிய மாநிலத்தின் சிந்துதர்க் மாவட்டத்தில் உள்ள வரத் என்ற கிராமம் ஆகும். அசோக் வரத்கர் மும்பையில் மருத்துவ படிப்பை முடித்த பின்னர், இங்கிலாந்து சென்றார். அங்கு அயர்லாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களது மகன்தான் லியோ வரத்கர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அசோக் வரத்கர் மும்பையில் உள்ள தனது சொந்த ஊரில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். அசோக் வரத்கர் மற்றும் லியோ வரத்கார் பற்றிய பெரிய நினைவுகள் சொந்த கிராம மக்களுக்கு இல்லை என்றாலும், தங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் அயர்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளதை அறிந்து மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
வரத் கிராமத்தைச்சேர்ந்த தாண்டேஸ் கூறுகையில், “ அசோக் வரத்கரை எனக்கு நன்கு தெரியும். நான் அடிக்கடி அவரை தொடர்பு கொள்வேன். சொந்த ஊரில் அசோக் வீடு கட்டும் போது நான் அவருக்கு உதவிகள் செய்தேன். அசோக் தனது சொந்த கிராமத்திற்கு வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். லியோ வரத்கரை நாங்கள் நேரில் பார்த்தது இல்லை. இருப்பினும் எங்கள் கிராமம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த தருணத்தை கொண்டாடி வருகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.