
நாம் சிறு வயது முதல் பார்த்து வரும் உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா உண்மையான அளவைவிட சிறியதாகத் தெரிகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். இதற்கு காரணம் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் Mercator Map எனப்படும் வரைபட முறையாகும். தற்போது ஆப்பிரிக்காவின் உண்மையான நிலப்பரப்பை சரியாகக் காட்டும் புதிய வரைபட முறையை பயன்படுத்துவதற்கு ஐ.நா.சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4 ஆம் தேதி ஐ.நா. பொதுச் சபை, உலக நாடுகளின் நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகக் காட்டும் “Equal Earth” என்ற வரைபட முறையை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆப்பிரிக்க நாடுகளின் சார்பில் டோகோ முன்னெடுத்த இந்த முயற்சிக்கு இந்தியா உட்பட 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தனர். 6 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை, அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்தது.
1569-ல் உருவாக்கப்பட்ட Mercator Projection வரைபடம், கடல் வழிப் பயணங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால், பூமியின் உருண்டை வடிவத்தை தட்டையான வரைபடமாக மாற்றும்போது, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகள் சிறியதாகவும், வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் மிகப்பெரியதாகவும் தோன்றுகின்றன.
இதனால் கிரீன்லாந்தும், ஆப்பிரிக்காவும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பது போன்று இருந்தது. உண்மையில், ஆப்பிரிக்காவின் நிலப்பரப்பு கிரீன்லாந்தைவிட சுமார் 14 மடங்கு பெரியதாம்.
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை மிகவும் துல்லியமாகக் காட்டும் வரைபடங்களில் ஒன்றுதான் இந்த Equal Earth Map. இதில் நாடுகளின் நிலப்பரப்பு அளவை ஒப்பீட்டளவில் சரியாக காட்டுகிறது.
இதனால், நாம் பயன்படுத்தப்படும் அனைத்து வரைபடங்களும் உடனடியாக மாறிவிடும் என்று அர்த்தமில்லை. ஐ.நா.தீர்மானமும் கட்டாய உத்தரவும் இல்லை. ஆனால் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் உலக வரைபடத்தை பயன்படுத்தும்போது, நாடுகளின் உண்மையான அளவைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், நாம் பல ஆண்டுகளாகப் பார்த்த உலக வரைபடம் தவறானது என்று சொல்ல முடியாது. ஆனால் அதில் நாடுகளின் உண்மையான அளவு துல்லியமாகத் தெரியாது. தற்போது ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை உலகிற்கு தெளிவாகக் காட்டும் முயற்சிதான் இந்த புதிய வரைபட விவாதத்தின் முக்கிய காரணம். அதாவது, உலகம் மாறவில்லை, உலகத்தை நாம் பார்க்கும் விதத்தில் மட்டுமே மாற்றம் வரப்போகிறது.