தமிழகத்தில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக வீடியோ வெளியிட்ட பீகாரை சேர்ந்த பிரசாந்த் என்பவரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள்
தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக பொய்யான தகவல் வெளியானது. இதன் காரணமாக அச்சமடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் பதற்றமான நிலையும் ஏற்பட்டதையடுத்து பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்களின் நிலை தொடர்பாக ஆய்வு செய்ய பீகாரில் இருந்து அரசு அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென திருப்தி தெரிவித்தனர்.
போதைக்கு அடிமையானவரை தலைகீழாக நிறுத்தி அடித்துக் கொன்ற கொடூரம்!
பீகாரில் ஒருவர் கைது
இந்தநிலையில் பொய்யான தகவலை பகிர்ந்தவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு இதுவரை 5க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் வட மாநிலத்தவர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் குமார் என்பவரை, பீகாரில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் ஹெஹெர்கா ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்து வருபவர் பிரசாந்த் குமார், இவர் தனது செல்போனில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, இணையத்தில் பொய்யான வீடியோ பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வட மாநிலத்தவர்கள் மூலம் வேகமாக பரவியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பீகாரில் கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமாரிடம் தமிழக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதவிவெறி பழனிசாமியே வெளியேறு..! இபிஎஸ்க்கு எதிராக போஸ்டர் ஒட்டி தெறிக்கவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்