Ramadoss: அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்! 9 நாட்களில் 4 பேர் தற்கொலை-தடுக்க தீர்வு என்ன? ராமதாஸ் கேள்வி

By Ajmal Khan  |  First Published May 24, 2024, 11:44 AM IST

ரூ.50 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி  சூதாடும் அளவுக்கு மணிவாசகன் துணிந்திருக்கிறார் என்றால்  ஆன்லைன் சூதாட்ட போதை ஒரு மனிதனை எந்த அளவுக்கு  ஆட்டுவிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ள ராமதாஸ் இத்தகைய கொடூரமான ஆன்லைன் சூதாட்டம் இனியும் தொடருவதை  அரசு அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். 


ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நாள் தோறும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகன் என்ற  இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால்  ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான  மணிவாசகன்  சம்பாதித்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். 

Tap to resize

Latest Videos

Annamalai : ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடம்.. பாஜக நிரப்பி வருகிறது- அண்ணாமலை அதிரடி

50 லட்சம் கடன்- இளைஞர் தற்கொலை

ஆனாலும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் நண்பர்கள், சக பணியாளர்கள், உறவினர்கள் போன்றோரிடமும் கடன் வாங்கி  ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் சுமை ரூ.50 லட்சத்தை தாண்டி விட்ட நிலையில், அதை எப்படி அடைப்பது? என்பது தெரியாமல் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக  தற்கொலை கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார். மணிவாசகனின் தற்கொலையால் அவரது இளம் மனைவியும், ஒன்றரை வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.ஆன்லைன் சூதாட்டம்  எந்த அளவுக்கு கொடுமையானது என்பதற்கு  மணிவாசகனின் முடிவு தான் துயரமான எடுத்துக்காட்டு.  சம்பாதித்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தது மட்டுமின்றி, 

ரூ.50 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி  சூதாடும் அளவுக்கு மணிவாசகன் துணிந்திருக்கிறார் என்றால்  ஆன்லைன் சூதாட்ட போதை ஒரு மனிதனை எந்த அளவுக்கு  ஆட்டுவிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய கொடூரமான ஆன்லைன் சூதாட்டம் இனியும் தொடருவதை  அரசு அனுமதிக்கக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது அதிகரித்து  விட்டன. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகளின் வேகம் இன்னும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது. 

வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?  

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 6  மாதங்களில் மொத்தம் 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்த தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த  நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.  

உச்சநீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை  தொடங்கி விட்ட நிலையில்   ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக தடை வாங்க முடியாது. இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?   ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என்று  வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?   ஏதேனும் சிறப்பு வழிகளைக் கண்டறிந்து  ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறப்போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

கூட்டணி கட்சி என்று பார்க்காமல் கும்ப கர்ணன் தூக்கத்தில் இருந்து விழியுங்கள்.! முற்றுப்புள்ளி வையுங்க- இபிஎஸ்
 

click me!