முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாதம் இறுதியில் அமெரிக்க செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உதயநிதியை துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளும் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமைச்சரவையிலும் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவும் உதயநிதியும்
அதிமுகவிடம் 2011ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த திமுக, சுமார் 8 ஆண்டுகள் எந்த வெற்றிகளும் பெறமுடியாமல் தவித்தது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் தோல்வியே கிடைத்தது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டில் தான் திமுகவிற்கு வெற்றி கிட்டியது. அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என தொடர் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக உதயநிதியின் பிரச்சாரம் இருந்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு உதயநிதிக்குபரிசாக இளைஞர் அணி பொறுப்பு வழங்கப்பட்டது.
அடுத்த தலைமையை உருவாக்கும் திமுக
அடுத்ததாக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர் மிகப்பெரிய வெற்றிபெற்றார். எம்எல்ஏவாக சில மாதங்களிலேயே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக பல்வேறு இடங்களுக்கு உதயநிதி சென்று வருகிறார். சிறப்பு அழைப்பாளராக பல இடங்களில் உதயநிதி கலந்து கொண்டுவருகிறார்.
அடுத்தக்கட்டமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சட்டமன்றத்திலையே திமுகவினர் குரல் கொடுத்தனர். ஆனால் எந்த வித பதிலும் முதலமைச்சர் சார்பாக அளிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தான் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதமோ அமெரிக்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி தொழிலதிபர்களோடு ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
துணை முதலமைச்சர்- அமைச்சரவையில் மாற்றம்
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை தொடர்பாகவும் மருத்துவ சிகிச்சை எடுக்கப்பட இருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உதயநிதிக்கு முதலமைச்சருக்கு இணையான துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக திமுக தரப்பில் பேசப்பட்டு வருகிறது. எனவே முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் உறுதியானதும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சரவை பணி மட்டுமில்லாமல் கட்சி பணியையும் சரியாக செய்ய அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பாகவும் திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.