வழிபாடுகளில் பெண் தெய்வ வழிபாடு, ஆண் தெய்வ வழிபாடு என்று பல வழிபாடுகள் உண்டு. பெண் தெய்வங்களை பொறுத்தவரையில் துர்கை, வாராஹி, பிரத்தியங்கிரா தேவி ஆகிய இவர்களை உக்கிர தெய்வங்கள் என்று சிலாகித்து சாக்த வழிபாடுகள் செய்வது எப்படி முக்கியமானதோ.. அதேபோன்று ஆண் தெய்வங்களிலும் பைரவர், நரசிம்மர், சரபேஸ்வரர் போன்ற தெய்வங்களை உக்கிர தெய்வங்கள் என்று போற்றி பக்தர்கள் முதலான முக்கியமான வழிபாடுகளாக உள்ளன.
வாழ்க்கையில் பலருக்கும் மன அமைதி இல்லாமலும், கடன் தொல்லையாலும் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். அப்படியிருக்கும் போது இதுபோன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து மன அமைதி தருபவராக இருப்பவர் தான் கால பைரவர். மற்ற தெய்வங்கள் போன்று சிவபெருமான் பல அவதாரங்கள் எடுத்து அசுரர்களை வதம் செய்வதில்லை. தேவையை பொறுத்து தான் தனது சக்தியின் சிறு பகுதியை வெளிபடுத்தி வருகிறார். அப்படி ஒருமுறை தனது சிறு பகுதி சக்தியை வெளிப்படுத்தும் போது உருவானவர் தான் கால பைரவர். அப்படி உருவான போது, எட்டு பைரவ திருக்கோலங்களை எடுத்து, அதில் இருந்து 64 பைரவர்களாக பிரிந்தார். அதில் அஷ்ட பைரவ ரூபங்களாக அஷிதாங்க பைரவர், பீக்ஷன பைரவர், குரோத பைரவர், ருரூ பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், தண்ட பைரவர், சம்ஹார பைரவர் போன்று கூறப்படுகிறது.
பைரவருக்கு காசி உரிய தலமாக கருதப்படுகிறது. காரணம், மேற்சொன்ன அஷ்டபைரவர்களும் காசியின் எட்டு திசைகளிலும் காவல் புரிந்து வருகிறார். இதனால் தான் காசிக்கு பைரவஷேத்திரம் என்ற பெயரும் உள்ளது. காலபைரவருக்கு காசியில் மட்டுமல்ல எல்லா சிவாலயங்களிலும் அவருக்கான சந்நிதியை நம்மால் பார்க்க முடியும். பொதுவாக, கோவிலில் ஏதேனும் பூஜைகள் செய்தாலோ அல்லது வீடுகளில் செய்தாலும் எப்படி முதலில் விநாயகப் பெருமானுக்கு பூஜையை செய்து தொடங்குகிறோமோ, அதேபோன்று தான் பூஜையானது முடிவு பெறுவது கால பைரவரிடம் தான். தற்போதும் கூட கோவிலை சந்நிதியை மூடிய பின்னர் அதன் சாவியை பைரவரின் சந்நதியில் வைத்து விடும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாள் என்று இருக்கும். அகங்காரத்தை அழிக்கக்கூடிய கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் தெய்வமாகவும் பைரவர் இருந்து வருகிறார். அதேபோன்று தான் பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வணங்கினால் துன்பங்கள் நீங்கி மன அமைதி உண்டாகும் என்பார்கள். ஏனென்றால், மஹா கால பைரவப் பெருமான் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி திதி அன்று தான் சிவபெருமானிடம் இருந்து உதயமானார். இது இன்று வரை யோகிகளினால் மஹாதேவ அஷ்டமியாக துதிக்கப்படுகிறது. அதனால் அஷ்டமி நாளில் உச்சி வேளை நேரத்தில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, மாலை சூட்டி, நெய் விளக்கு ஏற்றி, சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சித்து, வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கும்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலின் சிறப்புகள்!!
பைரவரை ஏழரைச் சனி, அஷ்டமச் சனி உள்ள நபர்கள் வணங்கினால் நன்மையாக முடியும். மேலும் பைரவருக்கு தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன போன்ற மாலைகள் எல்லாம் பிடித்தது. எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் அடிஎடுத்து வைக்காது விலகி ஓடும். விலகும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், தேய்பிறை அஷ்டமி கால பைரவரை வழிபட உகந்த நாளாக உள்ளது. அதிலும் செவ்வாய் கிழமையில் உள்ள தேய்பிறை அஷ்டமி இன்னும் விஷேசமானது. இது மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமையும் பைரவருக்கு உகந்த நாளாக உள்ளது. அதோடு ஏதேனும் தீராத நோய் அல்லது உடல் உபாதைகள், கடன் பிரச்சனை, வழக்கு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்றும், பணம் வர வேண்டும், தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் வளர்பிறை அஷ்டமியிலும் பைரவருக்கு விரதம் இருக்கலாம்.
திருப்பங்கள் அளிக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்..
”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
"ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்"
என்ற மந்திரம் சொல்லி கால பைரவரை வணங்கி வந்தால் நிச்சயம் மன அமைதி கிடைக்கும். அதனால் தேய்பிறை அஷ்டமி நாளான இன்று (அக்டோபர் 17) காலபைரவரை வணங்கி வழிபட்டு, அவரின் அருளை பெறலாம்.