அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி...63 நாயன்மார் சிலைகள் உடைப்பு.. ஒருவர் கைது!!

By Ma riyaFirst Published May 23, 2023, 2:10 PM IST
Highlights

அவிநாசியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரர் கோயிலில் நேற்றிரவு திருட்டு முயற்சி நடந்துள்ளது. அப்போது கோயிலில் இருந்த 63 நாயன்மார்களின் சிலையை அடித்து சேதம் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருக்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் பழமையான வரலாறு கொண்டது. இது கொங்கு பகுதியில் உள்ள 7 சிவாலயங்களில் முதன்மையான கோயிலாகவும் விளங்குகிறது. இந்தக் கோயிலின் புராண வரலாறை பொறுத்தவரை, முதலை விழுங்கிய சிறுவனை காக்க சுந்தரர் பதிகம் பாடியதாகவும், பின்னரே சிறுவன் மீட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

தொன்மையான இந்த ஆலயத்தில் நேற்றிரவு (மே.22) அடையாளம் தெரியாத நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆலயத்தில் இருந்த உண்டியல்களை உடைத்து சேதம் செய்ததோடு, கோவிலில் இருந்த வேல், உபகார பொருள்களையும் திருடியுள்ளனர். இதில் மிகவும் வருந்தக்கூடிய விஷயமாக மூலஸ்தான பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள், கதவுகள், 63 நாயன்மார்களின் சிலைகள் ஆகியவற்றை கண்முடித்தனமாக உடைத்து சேதம் செய்துள்ளனர். 

இதையும் படிங்க: இன்று கோடீஸ்வர யோகம் அருளும் அங்காரக சதுர்த்தி! கடன் பிரச்சினை தீர.. இந்த 1 எளிய பரிகாரம் செய்தால் போதும்!!

சுவாமி சிலைகளை திருடர்கள் உடைத்த சம்பவத்தை அறிந்து பக்தர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த டிஎஸ்பி பவுல்ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் விசாரணையில், அவினாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி  (32) தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்தது. அவரிடமிருந்த வெண்கலத்தால் ஆன வேல், சேவல் கொடி வேல், உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. திருப்பூரில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க திருத்தலங்களில் ஒன்றான லிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: 'திருபாய் அம்பானி' நினைவிடத்துக்கு போக இவ்ளோ தானா கட்டணம்!! எப்போ பொதுமக்களுக்கு அனுமதி தெரியுமா?

click me!