
இந்து தர்மத்தில் பூமி என்பது வெறும் மண் அல்ல; அவள் நம் அனைவரையும் தாங்கும் அன்னை, பூமாதேவி. பொறுமைக்கு இலக்கணமாகத் திகழும் பூமித்தாயால் அனைத்தையும் தாங்க முடியும். ஆனால், சில குறிப்பிட்ட புனிதப் பொருள்களின் அதிர்வலைகளையும், தெய்வீகத் தன்மையையும் தன்னால் நேரடியாகத் தாங்க முடியாது என்று அவளே மகாவிஷ்ணுவிடம் முறையிட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இறை வழிபாட்டில் நாம் செய்யும் சில தவறுகள் நமக்கு முழுமையான பலனைத் தருவதில்லை. அதில் முதன்மையானது, புனிதமான பொருள்களைத் தரையில் வைப்பதாகும். பூமிதேவி எவற்றைத் தாங்க இயலாது என்று கூறினாள் என்பதையும், அதன் பின்னால் உள்ள ஆன்மிகக் காரணங்களையும் காண்போம்.
தெய்வத் திருவுருவங்கள் மற்றும் சின்னங்கள்
தெய்வங்களின் திருவுருவச் சிலைகள், சிவலிங்கம், அம்பாள் மூர்த்திகள் மற்றும் சாளக்கிராமம் ஆகியவற்றை ஒருபோதும் வெறும் தரையில் வைக்கக்கூடாது. இவை இறைவனின் நேரடிச் சொரூபமாகக் கருதப்படுபவை. அதேபோல், தெய்வங்களின் ஆற்றல் அடங்கிய யந்திரங்கள் மற்றும் வழிபாட்டிற்குரிய சங்கு ஆகியவையும் தரையில் படக்கூடாது. இவற்றை ஒரு மரப்பலகை, பீடம் அல்லது பட்டுத் துணியின் மீதே வைக்க வேண்டும்.
ஞானம் தரும் புத்தகங்கள்
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் அம்சமாகப் புத்தகங்கள் கருதப்படுகின்றன. அதிலும் குறிப்பாக வேதாகமங்கள், புராணங்கள் மற்றும் ஆன்மிக நூல்களைத் தரையில் வைப்பது அந்த ஞானத்தை அவமதிப்பதற்குச் சமம். இதனாலேயே நாம் தவறுதலாகப் புத்தகம் காலில் பட்டால் தொட்டு கும்பிடுகிறோம்.
வழிபாட்டுப் பொருள்கள்
இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படும் புஷ்பங்கள் (பூக்கள்), பூமாலைகள், துளசி இலைகள் மற்றும் ஜபமாலை ஆகியவை உயர்வான ஆற்றல் கொண்டவை. இவை தரையில் படும்போது அவற்றின் புனிதத்தன்மை குறைகிறது. அதேபோல், இறைவனுக்குக் காட்டப்படும் தீபம், கற்பூரம் மற்றும் அபிஷேகம் செய்த தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாகப் பூமியில் வைப்பது பூமிதேவிக்கு பாரத்தை உண்டாக்கும்.
விலையுயர்ந்த ரத்தினங்கள் மற்றும் தங்கம்
விலையுயர்ந்த ரத்தினங்கள் மற்றும் தங்கம் முத்து, பவளம், வைரம், மாணிக்கம் போன்ற ரத்தினங்களும், மகாலட்சுமியின் அம்சமான தங்கம் மற்றும் பூணூல் ஆகியவையும் தரையில் வைக்கப்படக் கூடாதவை. இவை பூமியில் இருந்து உருவானாலும், சுத்திகரிக்கப்பட்டு உயர்நிலைப் பொருள்களாக மாறிய பின், மீண்டும் பூமியில் வைப்பது அவற்றின் மதிப்பையும் ஆற்றலையும் குறைப்பதாக அமைகிறது.
நறுமணப் பொருள்கள்
பூஜைக்குப் பயன்படுத்தப்படும் சந்தனம், கற்பூரம், கோரோசனை போன்றவை தெய்வத் திருமேனிகளில் பூசப்படுபவை. இவற்றைத் தரையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏன் தரையில் வைக்கக்கூடாது? - ஆன்மிகக் காரணம்
பூமி என்பது ஒரு பிரம்மாண்டமான காந்தம் போன்றது. அது எதையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டது. நாம் ஒரு புனிதப் பொருளைத் தரையில் வைக்கும்போது. அப்பொருளில் உள்ள தெய்வீக ஆற்றலை (Positive Energy) பூமி ஈர்த்துக் கொள்கிறது. இதனால் நாம் அந்தப் பொருளைப் பயன்படுத்துவதன் நோக்கம் நிறைவேறாமல் போகிறது. பூமிதேவி தூய்மையானவள் என்றாலும், நாம் நடக்கும் தரை என்பது அசுத்தங்கள் பட வாய்ப்புள்ள இடமாகும். எனவே, புனிதப் பொருள்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்.
நாம் செய்ய வேண்டியவை
வழிபாட்டின் போது ஒரு சிறிய தாம்பாளம், பீடம், அல்லது ஒரு சுத்தமான துணியை விரித்து அதன் மேல் இந்தப் பொருள்களை வைப்பதே முறையான வழிபாடாகும். இது பூமிதேவிக்கு நாம் செய்யும் மரியாதையும், இறைவனுக்கு நாம் காட்டும் பக்தியும் ஆகும்.