
உத்தரபிரதேசத்தில் உள்ள காசி இந்தியாவின் புனித நகரமாக கருதப்படுகிறது. உலகில் வாழும் அனைத்து இந்துக்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்குச் சென்று, கங்கை நதியில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்து வரவேண்டும் என்கிற ஆசை கொண்டுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காசிக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய 10 மாடி கட்டடம் ஒன்று நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
காசிக்கு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தங்க இடம் அளிப்பதற்காக ஏற்கனவே நகரத்தாருக்கு சொந்தமான சத்திரம் ஒன்று காசியில் உள்ளது. இந்த நிலையில் கூடுதல் வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட நகரத்தார்கள் திட்டமிட்டிருந்தனர். 2003 ஆம் ஆண்டே புதிய கட்டடம் கட்ட திட்டமிட்டு இருந்தாலும், இந்த இடம் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சிலரின் ஆக்கிரப்பில் இருந்தது. இதன் காரணமாக, பல ஆண்டுகளாக இந்த திட்டம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அப்போதைய வாரணாசி உதவி ஆட்சியாளராக இருந்த தமிழரான மணிகண்டன் ஆகியோரின் பங்களிப்பால் இந்த இடம் மீட்கப்பட்டது. இடம் மீட்கப்பட்ட பிறகு 2024 ஆம் ஆண்டு கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்த தங்கும் இடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டடம் பத்து மாடிகளுடன், 135 அறைகள், டார்மெட்டரி (தங்கும் கூடம்), உணவுக் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் மதிப்பு தோராயமாக ரூ.50 கோடி என கூறப்படுகிறது. இது பிரதானமாக நாட்டுக்கோட்டை செட்டியார்களால் (நகரத்தார்) கட்டப்பட்டுள்ளது என்றாலும், காசிக்கு வரும் அனைத்து தமிழக பக்தர்கள் மற்றும் தென் மாநிலத்தவர்கள் இங்கு தங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தின் திறப்பு விழா வருகிற அக்டோபர் 31, 2025 அன்று காலை 9:15 மணிக்கு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடத்தை மீட்கவும், கட்டடம் கட்ட முக்கிய காரணமாக இருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறப்பு விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று நாட்டுக்கோட்டை நகர சத்திரம் மேனேஜிங் சொசைட்டி தலைவர் நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புதிய கட்டடம் காசிக்கு யாத்திரை வரும் தமிழக பக்தர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் வசதியான தங்கும் இடத்தை அளித்து அவர்களின் ஆன்மீகப் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.