
Rajinikanth vs Kamalhaasan Movie Clashes : ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையே தொழில்முறை போட்டி என்பது இருந்துகொண்டே தான் இருக்கிறது. அண்மை காலகட்டத்தில் அந்த போட்டி குறைந்திருந்தாலும், 1980கள் மற்றும் 90களில் இருவரின் படங்களும் போட்டிபோட்டு வெளியாகி இருக்கின்றன. இவர்கள் இருவரது படங்களும் முதன்முறையாக போட்டி போட்டு ரிலீஸ் ஆனது 1983-ம் ஆண்டு தான். அந்த ஆண்டு கமல் நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே படமும் ரஜினியின் ‘தங்கமகன்’ படமும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆனது. இதில் தங்க மகன் சுமாரான வெற்றி என்றாலும், கமல் படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
பின்னர் 1984-ம் ஆண்டு தீபாவளிக்கு கமலின் ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படமும் ரஜினியின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படமும் ரிலீஸ் ஆனது. இந்த மோதலில் ரஜினி வெறார். அவர் படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. 1958-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டன்று கமலின் காக்கி சட்டை, ரஜினியின் நான் சிகப்பு மனிதனும் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே ஹிட்டானாலும் கமலுக்கு தான் பிரம்மாண்ட வெற்றி கிடைத்தது.
1986ம் ஆண்டு தீபாவளி அன்று கமலின் ஜப்பானில் கல்யாண ராமன் படமும் ரஜினியின் படிக்காதவன் படமும் ரிலீஸ் ஆகின. இதில் இரண்டு படங்களுமே வெற்றிபெற்றாலும் ரஜினிக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது படிக்காதவன். 1987-ம் ஆண்டு தீபாவளிக்கு கமலின் புன்னகை மன்னன் படமும் ரஜினியின் மாவீரன் படமும் ரிலீஸ் ஆகின. இதில் கமலின் புன்னகை மன்னன் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
பின்னர் 1989-ம் ஆண்டு தீபாவளி அன்று கமலின் வெற்றி விழாவும், ரஜினியின் மாப்பிள்ளை திரைப்படமும் வெளியானது. இதில் வெற்றிவிழாவை பின்னுக்கு தள்ளி சக்கைப்போடு போட்டது மாப்பிள்ளை திரைப்படம். 1990ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பணக்காரன் படமும் கமல் நடித்த இந்திரன் சந்திரன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதிலும் ரஜினியே வெற்றிவாகை சூடினார். தொடர்ச்சியாக ரஜினியிடம் தோற்றுப்போனதால் 1991-ம் ஆண்டு கமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
அந்த ஆண்டு ரஜினி தனக்குரிய மாஸ் சப்ஜெக்ட் படங்களை தேர்ந்தெடுத்து ஹாட்ரிக் வெற்றிக்கு தயாரானார். அதன்படி மகாபாரதத்தை தழுவி ரஜினியின் தளபதி திரைப்படம் எடுக்கப்பட்டது. இது மணிரத்னம் ரஜினிக்காகவே தயாரித்த கதை. படத்திற்கு இளையராஜா இசை, இந்த படத்திற்கு அவர் போட்ட பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
மறுபுறம் ரஜினிக்கு போட்டியாக 1991-ல் கமல் நடித்த படம் குணா. இதை சந்தான பாரதி இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இந்தபடத்திற்கு பின் கொடைக்கானலில் இப்படம் படமாக்கப்பட்ட குகை, குணா குகை என்று அழைக்கப்பட்டு, இன்று முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மாறி இருக்கிறது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார் கமல். இப்படத்திற்கும் இளையராஜா தான் இசை.
கண்மணி அன்போடு காதல் என்கிற ஒற்றை பாடலே பட்டிதொட்டியெங்கும் அப்படத்தை கொண்டு சேர்த்தது. இப்படி பல வித்தியாசங்கள் காட்டியும் கமலால் ரஜினியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்க முடியவில்லை. இறுதியாக தளபதி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் 1992-ல் ரஜினியின் பாண்டியன் படமும், கமலின் தேவர்மகன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதில் கமல் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார். இப்படி திரையில் இரு துருவங்களாக இருவரும் இருந்தாலும் நிஜத்தில் இவர்கள் இருவருமே நட்புக்கு இலக்கணமாக இருக்கிறார்கள்.