நல்ல தரமான சிமெண்டை கண்டுபிடிப்பது எப்படி? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

First Published Dec 11, 2017, 1:43 PM IST
Highlights
How to find good quality cement? You can read this ...


நாம் அனைவரும் சொந்தமாகவும், அழகாகவும் நமது வீடுகளைக் கட்டவேண்டும் என்று விரும்புகிறோம். பல தலைமுறைகளுக்கும் நிலைக்கக்கூடிய வீட்டைக் கட்ட எந்த அளவு தரமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

வீடு என்ற கட்டிடத்துக்கு உயிர் தரக்கூடியவை சிமெண்ட், இரும்புக்கம்பிகள், ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட மூலப்பொருட்கள். இவை எந்த அளவிற்குத் தரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பல வருடங்கள் அந்த வீடு நிலைத்து நிற்கும். கட்டிட அமைப்புகளுக்கு உறுதியையும், தரத்தையும் தருவதில் முக்கியமான இடத்தில் இருப்பது சிமெண்டு ஆகும். தரமான சிமெண்டு இல்லாமல், வானளாவிய கட்டிடங்கள் சாத்தியமில்லை.

வீடுகளை வடிவமைத்துத் தரக்கூடிய பொறியாளர்கள் அல்லது நிறுவனங்கள் பயன்படுத்தும் சிமெண்டு எப்படிப்பட்டது என்பதை வைத்தே கட்டிடத்தின் தரம் அமைகிறது. 

அப்படியானால், தரமான சிமெண்ட்டை எவ்வாறு அடையாளம் காண்பது.? அதற்கான அளவுகோல்கள் என்ன..? சிமெண்டில் எத்தனை வகைகள் உள்ளன..? என்ற பொதுவான தகவல்களை அறிந்து கொள்வது முக்கியமாகும். 

கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தும் சிமெண்டில் 10–க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பொதுவாக வீடுகளும், அடுக்குமாடிக்குடியிருப்புகளும் கட்டுவதற்கு, ‘ஆர்டினரி போர்ட்லேண்ட்’ சிமெண்டு வகைதான் நடைமுறையில் உள்ளது. 

சிமெண்டு வகைகளின் தரக்குறியீட்டை வைத்தே, அதன் உறுதித்தன்மை எவ்வளவு, அதன் இறுகக்கூடிய தன்மை எத்தகையது மற்றும் அதன் நீடித்து உழைக்கும் தன்மை எந்த அளவுக்கு உள்ளது போன்ற விஷயங்கள் கணக்கிடப்படுகின்றன.

அந்த வகையில், 33 கிரேடு, 43 கிரேடு, மற்றும் 53 வகை கிரேடு என மூன்று வகை சிமெண்ட் வகைகள் வீடுகள் கட்டப்பயன்படுகின்றன. இந்தியத்தர நிர்ணய அமைப்பு மூலமாக எல்லா சிமெண்ட் வகைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

33 கிரேடு போர்ட்லேன்ட் சிமெண்டு என்பது சின்னச்சின்னப் பணிகளுக்கும், சாதாரணமான பூச்சு வேலைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. அவை சற்று குறைவாகவே புழக்கத்தில் உள்ளது. அதன் விலையும் மற்றவைகளை விட குறைவு. 

43 கிரேடு கொண்ட சிமெண்டானது அனைத்து வகையான வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும் பொருந்தக்கூடியது. நமது ஊரில் பெரும்பாலும் அந்த வகையான சிமெண்டுதான் பயன்பாட்டில் உள்ளது.

இந்த வகை சிமெண்டு மூலம் வீடுகள், கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டிற்கான அடித்தளங்கள், வெளிப்பூச்சுக்கள், உள்பூச்சுக்கள், டைல்ஸ், மார்பிள், கிரானைட் ஒட்டுதல், தரைப்பூச்சு போன்ற பணிகளைச் செய்வது தற்போது நடைமுறையில் உள்ளது. 

53 கிரேடு சிமெண்டு என்பது நல்ல கட்டமைக்கும் திறம் பெற்றது. இந்த வகை சிமெண்டு அடுக்குமாடி குடியிருப்புகள், உயர்ந்த கட்டிடங்கள், பாலங்கள் உள்ளிட்ட பெரிய வகை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

* சிமெண்ட்டை தேர்வு செய்யும் போது, பி.ஐ.எஸ் தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் சிமெண்ட்டை தேர்வு செய்ய வேண்டும்.

* தேர்வு செய்யும் நிறுவனத்தின் சிமெண்டு மூட்டையின் மீது அந்த நிறுவனத்தின் பெயர் முறையாக அச்சிடப்பட்டுள்ளதா?, மூட்டையின் வாய்ப்பகுதி கையால் தைக்கப்படாமல், இயந்திரத்தால் தைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும். மூட்டையின் வாய்ப்பகுதியில் தையல் பிரிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

* சிமெண்டு உற்பத்தி செய்யப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி மூட்டையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் இருக்கும் சிமெண்டை வாங்குவது நல்லதாகும்.

* சிமெண்டு மூட்டையினுள் கைவிட்டு சிமெண்ட்டை தொடும்போது, குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு கையில் சிமெண்டை அள்ளி ஒரு வாளி நீருக்குள் போடும்போது, சிமெண்டு சில நிமிடங்கள் மிதந்த பின்பே நீரில் கரைய வேண்டும். போட்டவுடன் நீரில் கரையும் சிமெண்ட் வகைகள் அவ்வளவு நல்லதல்ல.

* சிமெண்டைக் கொஞ்சம் எடுத்து அதை பேஸ்ட் போலக்குழைத்து ஓரு அட்டை அல்லது பிளேட்டில் சதுரவடிவத்தில் அமைக்கவேண்டும். அதை அப்படியே மெல்ல நீரில் அமிழ்த்தும்போது, அந்த வடிவம் அவ்வளவு எளிதில் கரையக்கூடாது. ஒரு நாள் கழித்தே அது இறுகி கடினமானதாக மாறவேண்டும்.

* சிமெண்டை கைகளில் எடுத்து, விரலில் வைத்து தேய்க்கும்போது கல்துகள்களை தேய்ப்பதுபோல இருக்கக் கூடாது.

* சிமெண்டை வாங்கியபின்பு காற்றோட்டம் அதிகமாக இல்லாத இடத்தில் அதை அடுக்கி வைத்து பத்திரப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில், சிமெண்டு மூட்டைகளை பாலிதீன் உறைகள் போட்டு மூடி வைக்கப்பட வேண்டும்

click me!