வீடுகளை அலங்கரிக்கும் ஆக்டிவ் டே லைட்டிங் சிஸ்டம் பற்றி தெரியுமா?

 
Published : Jul 11, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
வீடுகளை அலங்கரிக்கும் ஆக்டிவ் டே லைட்டிங் சிஸ்டம் பற்றி தெரியுமா?

சுருக்கம்

Do you know about the Active Day lighting system?

அது என்ன ஆக்டிவ் டே லைட்டிங்?

இயற்கையாகக் கிடைக்கும் பகல் வெளிச்சத்தை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்வதுதான் இதன் நோக்கம்.வழக்கமாகச் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சூரிய ஒளிமின்கலப் பட்டைகளைக் கூரைப் பகுதியில் அமைப்பார்கள். இவை, சூரிய ஒளியை உள்வாங்கி அதனை மின்சாரமாக மாற்றிக் கொடுக்கும்.

இந்த மின்சாரத்தைக் கொண்டு விளக்குகளை எரிப்பது, காற்றாடிகளைச் சுழலவிடுவது போன்ற வேலைகளைச் செய்து கொள்வோம்.அதற்குப் பதிலாக, ஒளிஇழை வடங்களை ( ஆப்டிக் ஃபைபர் கேபிள்) உபயோகிக்கலாம்.

இவை சூரிய ஒளியை அப்படியே எடுத்துக் கொண்டு, அந்த ஒளியை வேறு பல இடங்களுக்கு எடுத்துச் சென்று கொடுக்கும். நேரடியாகச் சூரிய ஒளி பட வாய்ப்பில்லாத, கட்டடத்தின் பிற பகுதிகளுக்கு வெளிச்சத்தை அளிக்கும்.

சூரிய மின் கலப் பட்டைகளையும் ஒளி இழை வடங்களையும் ஒரே சேர அமைக்கும் உத்தியை ஆக்டிவ் டே லைட்டிங் என்று சொல்லலாம்.கூரை மேல் கண்ணாடியைப் பதித்து வைத்தால் அதன் வழியாகச் சூரிய வெளிச்சம் உள்ளுக்குள் வந்துவிட்டுப் போகிறது.. இதற்குப் போய் எதற்காகப் பெரிதாக மெனக்கெட வேண்டும் என்று கருதுவீர்கள். 

இது சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்ள எளிமையான வழிதான். ஆனால் ஒன்றை நினைத்துப் பார்க்க மறந்துவிடுகிறீர்கள். நீங்கள் கூரையில் பதித்து வைத்திருக்கும் கண்ணாடி அதே இடத்தில்தான் இருக்கும்.  சூரியன் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே போகும். இதனால் என்ன ஆகும்? அறைக்குள் விழும் வெளிச்சத்தின் கோணம் மாறும். அளவும் மாறும்.

சில  நேரங்களில் வெளிச்சம் விழாமலேயே கூடப்போய்விடலாம்.இதற்குப் பதிலாக, சூரியன் நகர, நகர அதைத் தொடர்ந்து பின்பற்றும் ட்ராக்கர் என்ற சாதனம் பொருத்தப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்வோம். அப்போது சூரியனின் போக்கைப் பின்பற்றிக் கண்ணாடியும் நகரும். அறைக்குள் தொடர்ந்து வெளிச்சம் கிடைத்துக் கொண்டே இருக்க வழி ஏற்படும்.

கூரையிலாகட்டும், சுவர்களிலாகட்டும் ஆங்காங்கே திறப்புகளை ஏற்படுத்தினால் வெளியில் உள்ள வெளிச்சம் தன்னால் உள்ளுக்குள் வரப் போகிறது.. இதற்குப் போய் எதற்கு ஒளி இழை வடம் என்று கேட்க நினைப்பீர்கள்.நீங்கள் சொல்வது போல் சுவர்களிலும் கூரைகளிலும் திறப்புகளை ஏற்படுத்தலாம்தான். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் அந்தந்த அறைகளில் வேண்டுமானால் வெளிச்சம் உள்ளே வரலாம்.

அடுத்தடுத்து உள்ள, கட்டடத்தின் உட்பகுதிகளுக்கு அதைக் கொண்டு செல்ல இயலாது. அப்படியே கொண்டு சென்றாலும் அதன் அளவும் அடர்த்தியும் குறைந்து போகும்.அடுக்கு மாடிக் கட்டடங்களில் அடுத்தடுத்த தளங்கள் வந்துவிடும் என்பதால் கூரைப் பகுதியில் திறப்பு வைப்பது என்பது இயலாத காரியம்.

ஒளி இழை வடங்களை எங்கு வேண்டுமானாலும் வளைத்து நெளித்து எடுத்துச் செல்லலாம். சிறு துளைகள் வழியாகவும் நுழைத்துக் கொண்டு செல்லலாம்.குறுகலான வளைவுகளைக் கடந்தும் வெளிச்சம் தங்கு தடையின்றிப் பயணிக்கும்.

இரண்டே இரண்டு அங்குல விட்டம் கொண்ட பகுதிகள் என்றாலும் இத்தகைய மடிப்புக்களால் ஒளியின் பயணம் தடைப்படாது. சூரிய ஒளி படுகிற இடத்தில் இருந்து, பயன்படுத்தப்பட வேண்டிய பகுதிக்கு ஒளி இழை வடம் மூலம் கொண்டு சென்றுவிட்டால் அங்கு இந்த ஒளியை விதவிதமான தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

PREV
click me!