நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 % குறைப்பு: சூடு பிடிக்குமா ரியல் எஸ்டேட் தொழில்?

First Published Jun 8, 2017, 6:17 PM IST
Highlights
33 percent price reduce Real estate land


இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமும் பணப்புழக்கமும் ரியல் எஸ்டேட் தொழிலில்தான் தெரியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடித்தால்தான், வணிகர்கள் கையிலும், பொது மக்கள் கையிலும் பணம் தாராளமாக புழங்கும்.

ஆனால், கைடு லைன் வேல்யூ என்று சொல்லக்கூடிய நிலங்களின் வழிகாட்டு மதிப்பு கூட்டப்பட்டதாலும், பத்திர பதிவு கட்டணம் உயர்ந்ததாலும், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் தொழில், தமிழகத்தில் முற்றிலும் முடங்கி போய்விட்டது.

அதனால், பொதுமக்களின் மத்தியில் பணப்புழக்கம் குறைந்தது. அதன் தொடர்ச்சியாக வணிகம் குறைந்து, கட்டுமான தொழில் நிறுவனங்கள், அதை சார்ந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்புமே பாதிப்புக்கு ஆளாக நேர்ந்தது.

அத்துடன், பத்திர பதிவும் குறைந்து விட்டதால், அரசுக்கும் ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நிலங்களின் வழிகாட்டு மதிப்பை குறைக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று நடந்த, அமைச்சரவை கூட்டத்தில், நிலங்களின் வழிகாட்டு மதிப்பை 33 சதவிகிதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் சூடு பிடித்து, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும், அதன் மூலம் வணிகமும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!