
கடும் சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.
கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆர்.ஆர்.நகர், ஜெயா நகர் ஆகிய இரண்டு தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக 104 இடங்களையும் காங்கிரஸ் 78 இடங்களையும் மஜத 38 இடங்களையும் கைப்பற்றியது. 2 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், அந்த கூட்டணி 115 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது. எனவே 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றுள்ள தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கர்நாடக ஆளுநரிடம் குமாரசாமி கடிதம் கொடுத்தார்.
அதேபோல, தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவின் எடியூரப்பாவும் உரிமை கோரினார். கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதற்கு தடை கோரி காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை நள்ளிரவில் விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க முடியாது என தெரிவித்துவிட்டது.
இதையடுத்து இன்று காலை, 9 மணியளவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா. இதற்கு மஜத மாநில தலைவர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டாக சட்டமன்ற தேர்தல் நடந்த உத்தர பிரதேசம், உத்தரகண்ட், குஜராத், இமாச்சல் பிரதேசம், கோவா, மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது கர்நாடகாவிலும் ஆட்சியை பிடித்துவிட்டது.