ஹைட்ரோ கார்பன் திட்டம்..! எடப்பாடி போட்ட கோட்டை தாண்டினாரா சி.வி சண்முகம்..?

By vinoth kumarFirst Published Jul 4, 2019, 12:35 PM IST
Highlights

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் சிவி சண்முகம் பேசிய பேச்சு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர வைப்பதாக இருந்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் சிவி சண்முகம் பேசிய பேச்சு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர வைப்பதாக இருந்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது முதலில் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா பேசினார். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பினார். உடனடியாக எழுந்த அமைச்சர் சிவி சண்முகம் யாரும் எதிர்பாராத வகையில் விஸ்வரூபம் எடுத்துவிட்டார். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி கொடுக்கப்படாது என்று அவர் கூற ஒட்டு மொத்த சட்டப்பேரவையுமே அதிர்ச்சியானது. மேலும் மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசால் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று சிவி சண்முகம் கூற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போய் சண்முகத்தை பார்த்ததை காண முடிந்தது. 

இதற்கு காரணம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக விரிவாக பேசியிருந்தார். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்பது தான் தர்மேந்திர பிரதான் கூறியதன் சாராம்சம். அதாவது தமிழக மக்களின் அனுமதியை பெற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பதை மறைமுகமாக தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். கிட்டத்தட்ட இது தான் தமிழக அரசின் நிலைப்பாடும் கூட. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் எதிர்ப்பு எழுவதும் பிறகு மக்களை சமாதானம் செய்து அந்த திட்டத்தை நிறைவேற்றுவதும் தான் தமிழக அரசின் நிலைப்பாடு. அந்த வகையில் தமிழகத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது என்று தான் அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருக்க வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள். 

ஆனால், தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்காது என்று சட்டப்பேரவையில் சி.வி. சண்முகம் கூறியதுடன் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக இருப்பதாகவும் கூறியது தான் தலைமைச் செயலகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பிரதான திட்டம் ஒன்றை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்திருப்பது கிட்டத்தட்ட மத்திய அரசுக்கு எதிரான மிகப்பெரிய நிலைப்பாடு என்கிறார்கள்.

சிவி சண்முகம் துவக்கம் முதலே பாஜக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ளார். தேர்தல் முடிந்த கையோடு தோல்விக்கு பாஜக கூட்டணி தான் காரணம் என்று வெளிப்படையாக சொன்னார். மேலும் பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிமுக பிரதிநிதியாக சிவி சண்முகம் டெல்லி சென்றார். ஆனால் அவரை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. 

இப்படி பாஜகவுடன் உரசலில் இருந்த சிவி சண்முகம் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டாரா அல்லது அவர் மனதில் வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்று சந்தேகமும் எழுந்துள்ளது. சிவி சண்முகத்தின் இந்த பேச்சு தேவையில்லாமல் தனக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று முதலமைச்சரும் கவலையில் உள்ளதாக சொல்கிறார்கள்.

click me!