கமலுக்கு ஈடுகொடுப்பாரா மு.க.ஸ்டாலின்..? இப்பவே கண்ணைக்கட்டுதே...!

By Thiraviaraj RMFirst Published Dec 11, 2020, 3:11 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த மாதம் தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு நெருக்கடி தரும் விதமாக, கமலும் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பது திமுகவினருக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
 

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த மாதம் தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு நெருக்கடி தரும் விதமாக, கமலும் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பது திமுகவினருக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக முதல் ஆளாக முன்னெடுத்துள்ளது. ‘விடியலை நோக்கி... ஸ்டாலினின் குரல் அடுத்து தமிழகத்தை மீட்போம்’என்னும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தை முதற்கட்டமாக, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியே வராமல் இருந்து வந்த திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த சில நாட்களாக வெளியே தலையை காட்டி வருகிறார்.

பிரச்சாரத்தின் போது, அதிகளவிலான கூட்டம் சேரும் என்பதால், சற்று கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கலாம் என முடிவு செய்த அவர், அடுத்த மாதம் முதல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். இதற்கான, தேர்தல் பிரச்சார அட்டவணையை திமுக தயாரித்துள்ளது. ஆளும் கட்சி, மாற்று கட்சி என யாரும் இல்லாத களத்தில் பிரச்சாரத்தின் மூலம் மக்களை கவர்ந்து விடலாம் என எண்ணிய ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாளை மறுநாள் முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். 

13ம் தேதி முதல் 16ம் தேதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விடலாம் என கமல் திட்டமிட்டுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நகரப் பகுதிகளில் அதிக வாக்குகளை வாங்கி இருப்பதால், இந்த முறையும் நகரப் பகுதிகளையே அவர் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், உதயநிதியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் தலைவராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். உதயநிதி, கனிமொழி ஆகியோரின் பிரச்சாரங்கள் ஊடகங்களில் பெரிதும் முன்னிறுத்தப்படாத நிலையில், பொதுமக்கள் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், சரியான நேரத்தில் களமிறங்கி திமுகவிற்கு நெருக்கடி கொடுத்து, ஆதரவை திரட்ட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். திமுக பக்கம் செல்லாத ஊடகங்களின் பார்வையை தனது பக்கமும் திருப்பி, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதேவேளையில், ஊழலை மையமாக வைத்து மட்டுமே அரசியல் செய்யும் கமல்ஹாசன், பிரச்சாரத்தில் தற்போது போட்டியாக உள்ள திமுகவின் மானத்தை கப்பல் ஏற்றி விடுவாரோ? என்று அக்கட்சியினர் அச்சப்படுகின்றனர். 

பொது இடங்களில் கூட்டத்தை கூட்டக் கூடாது என்ற கொரோனா விதிமுறைகளை மறந்து திமுக நிகழ்த்தும் பிரச்சாரக் கூட்டங்களை போல, தங்களின் பிரச்சாரம் இருக்காது என மக்கள் நீதி மய்யத்தினர் ஏற்கனவே கூறிவிட்டனர். எனவே, மக்களிடம் நன்மதிப்பை பெறும் விதமாகவும், வரவேற்பை பெறும் வகையிலுமான பிரச்சார அணுகுமுறை இருக்கும் என கட்சியினர் நம்பி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்து விட்டு தேர்தலை சந்தித்த கமல்ஹாசன், இந்த சட்டப்பேரவை தேர்தலில் 5 மாதங்களுக்கு முன்பே பிரச்சார களத்தில் இறங்குவது கமல்ஹாசனின் புதிய அரசியல் வியூகம் என்கின்றனர் மய்யத்தினர். நலத்திட்ட உதவிகளை வழங்கியபோதே ஸ்டாலினுக்கு மயக்கம் வந்து மருத்துவமனையில் சேர்ந்து விட்டார். கமலுக்கு ஈடாக பிரச்சாரம் செய்ய ஸ்ஆலினால் முடியமா? எனக் கேட்கிறார்கள் மய்யத்தின் மத்தியஸ்தர்கள். 

click me!