மம்தாவுக்கு செக் வைக்க மத்திய அரசு அதிரடி... கிரண்பேடியை மேற்கு வங்கம் அனுப்ப திட்டம்?

By Asianet TamilFirst Published Jul 7, 2019, 10:52 AM IST
Highlights

அதன் ஒரு பகுதியாக முதல்வர் மம்தாவுக்குக் குடைச்சல் கொடுக்கும் வகையில் அந்த மாநிலத்தில் புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அந்த இடத்துக்கு கிரண்பேடியை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு செக் வைக்கும் வகையில் அந்த மாநில ஆளுநர் பொறுப்புக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரிகளுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட அரசியல் மோதல் போல, இப்போது திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே அரசியல் மோதல் இருந்துவருகிறது. இரு கட்சிகளின் தொண்டர்களும் கீரியும் பாம்புமாக மோதிக்கொள்வதால், அரசியல் மோதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. மேலும் மத்திய அரசோடு மம்தா பானர்ஜி தொடர்ந்து மோதல் போக்கையும் கடைபிடித்துவருகிறார். இதனால், மம்தாவுக்கு செக் வைக்கும் நடவடிக்கைகளை பாஜக தொடங்கியிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக முதல்வர் மம்தாவுக்குக் குடைச்சல் கொடுக்கும் வகையில் அந்த மாநிலத்தில் புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அந்த இடத்துக்கு கிரண்பேடியை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மக்களை அவமதித்தாக கிரண்பேடிக்கு எதிராக திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்தன. கிரண்பேடியை நீக்க வேண்டும் என்று தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில் விரைவில் காலியாக உள்ள மேற்கு வங்கத்துக்கு கிரண்பேடியை மாற்றலாம் என்ற ஒரு திட்டம் மத்திய அரசு வைத்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய மாநிலமான புதுச்சேரியிலிருந்து பெரிய மாநிலமான மேற்கு வங்கத்துக்கு கிரண்பேடியை மாற்றினால், அதை அவரும் எதிர்க்கமாட்டார் என்ற அடிப்படையில் இந்த முடிவை எடுக்க மத்திய அரசு பரிசீலித்துவருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஒரு வேளை கிரண்பேடியை மேற்கு வங்கத்துக்கு அனுப்பினால், மம்தாவுக்கும் கிரண்பேடிக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். 

click me!