இதுக்காகத் தான் சிலைகளை கும்பிடாதீங்கனு சொல்கிறோம்... சீமான் சொல்லும் புதிய கோணம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 26, 2019, 12:06 PM IST
Highlights

சிலையை கடத்தி விடுவார்கள் என்று தெரிந்தே அவற்றை கும்பிட வேண்டாம் என அய்யா வைகுண்டர் கூறியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சிலையை கடத்தி விடுவார்கள் என்று தெரிந்தே அவற்றை கும்பிட வேண்டாம் என அய்யா வைகுண்டர் கூறியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

அமிரா படத்தின் ஷூட்டிங் சின்னாளபட்டி அருகே நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து சரியான கருத்து. அதனை நான் ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாக பார்க்கிறேன். கல்வி மாநில அரசின் உரிமை. ஆனால், கல்வியை மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்ற பின் அனைத்து அதிகாரத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டது. இந்தி, சமஸ்கிருதம் படிக்க சொல்கிறார்கள். இந்திய மொழிகளின் தொன்மையை தமிழ் மொழியில் இருந்து அறியலாம் என்று நாட்டின் பிரதமரே கூறுகிறார்.

பழமையான மொழி, தொன்மையான மொழிதான் இந்திய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னால் தமிழை தான் ஆட்சி மொழியாக வைக்க வேண்டும். ஆனால், 500 ஆண்டுகளுக்குள்ளாக வந்த இந்தியை அனைவரும் படிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம். நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கிறோம். இதற்கு ஆட்சியாளர்களிடம் இருந்து பதிலே இல்லை.

ஒரு இனத்தை மொழியில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? எங்களுக்கெனறு ஒரு வேதம் உள்ளது. அது திருக்குறள். இதனை மத்திய பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே. 3ம் வகுப்பு 6ம் வகுப்பு 9ம் வகுப்பில் ஆகிய வகுப்பில் பொது தேர்வு என்கிறார்கள். கல்வியில் முதலிடத்தில் உள்ள தென்கொரியா 8 வயதில் தான் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்கிறார்கள். நீங்கள் அந்த வயதில் பொது தேர்வு எழுத சொல்கிறீர்கள். நாங்கள் 8ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத தேர்ச்சி வேண்டும் என்கிறோம். சுவர் இல்லாத கல்வி கேட்கிறோம். 9 ம் வகுப்பில் தேர்வுவையுங்கள், 10ம் வகுப்பில் பொது தேர்வுவையுஙகள் என்கிறோம்.

அடிப்படை கேள்வி என்னவென்றால் கல்வியை சந்தை பொருளாக்கி விட்டார்கள். முதலாளிகளின் விற்பனை பண்டமாக மாற்றிய பின்பு இந்த கல்வி கொள்கை யாருக்கு பயன்படும். முதலாளிகள் லாபம் ஈட்ட உதவுமே ஒழிய, மாணவர்களுக்கு அறிவை வளர்க்க பயன்படாது. எல்லா தேசிய இனங்களையும் கொன்றுவிட்டு ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரேசன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே அதிகாரம் அதை நோக்கி நீங்கள் போகிறீர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

சிலை திருட்டை பொருத்தவரை அறநிலையத்துறை அமைச்சர், நாட்டை ஆளுகிற ஆட்சியாளர்கள், கோவிலில் இருக்கும் குருக்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தெரியாமல் ஒரு சிலை களவு போயிருக்கும் என்பது ரொம்ப வேடிக்கையானது. இதனால்தான் அய்யா வைகுண்டர் சிலையை கும்பிடாதே என்றார். பின்னால் சிலையை கடத்தி விடுவார்கள் என்று தெரிந்தே சொன்னரோ வைகுண்டர். ஆயிரக்கணக்கான சிலைகள் காணாமல் போனது கொடுமை தான்.

நாம் தமிழர் கட்சியின் தத்துவமே ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் ஆரம்பிக்கப்பட்டது. கட்சிகளோடு கூட்டணி வைத்தால் அந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. அதனால் இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளோடு எப்போதும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க மாட்டோம். தனித்து தான் போட்டியிடுவோம். சமூக கடமைக்காக தான் எங்களது கட்சியில் அதிகளவு பெண்களுக்கு போட்டியிட இடம் கொடுக்கிறோம். நாங்கள் பேசிய பின் ஜெயலலிதா உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார். இதை தான் சட்டமன்ற, பாராளுமன்றத்திலும் கேட்கிறோம். எங்களது கட்சியில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 117 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம். பெண் விடுதலை இன்றி மண் விடுதலை இல்லை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை பின்பற்றுவோம்’’ என அவர் கூறினார். 

click me!