அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பாஜக என்ன செய்யப்போகிறது? அக்டோபர் 7ல் நடக்கப்போவது என்ன?

Published : Oct 02, 2020, 11:19 AM IST
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பாஜக என்ன செய்யப்போகிறது? அக்டோபர் 7ல் நடக்கப்போவது என்ன?

சுருக்கம்

அக்டோபர் 7ந் தேதியை வெறும் அதிமுகவினர் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. காரணம் அன்று தான் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க உள்ளனர். 

அக்டோபர் 7ந் தேதியை வெறும் அதிமுகவினர் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. காரணம் அன்று தான் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க உள்ளனர். 

கடந்த 28ந் தேதி நடைபெற்ற செயற்குழுவை தொடர்ந்து அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து அக்டோபர் 7ல் அறிவிப்பார்கள் என்று கூறிவிட்டுச் சென்றார் கே.பி.முனுசாமி. அக்டோபர் 7ந் தேதி முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவித்தே ஆக வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக உள்ளார். ஆகஸ்ட் மாத கடைசியிலேயே சட்டப்பேரவை தேர்தல் பணிகளை துவங்கிட எடப்பாடி ஆயத்தமாகி வந்தார். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் போட்ட முட்டுக்கட்டையால் எடப்பாடியாரின் தேர்தல் பணிகள் தாமதமாகி வருகிறது.  

இதற்கிடையே அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து மாற்று அரசியல் சக்தியாக உருவெடுக்க நேரம் பார்த்து காத்திருக்கிறது பாஜக. மீண்டும் அதிமுகவில் மோதல் வெடித்து இரண்டாக அக்கட்சி உடைந்தால் இரட்டை இலை சின்னம் முடங்கும், அதன் மூலம் தமிழகத்தில் தாமரையை மலர வைக்கலாம் என்று பாஜக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது.

இரட்டை இலை முடங்கிவிட்டால், ரஜினி நிச்சயம் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று பாஜக நம்புகிறது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்கிற வியூகத்திலும் பாஜக உள்ளதாக சொல்கிறார்கள். தவிர ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெறும் தகவலாகவே உள்ளது. இதுவரை ரஜினி தரப்பில் இருந்து மாவட்ட தலைவர்களுக்கு கூட அழைப்பு செல்லவில்லை என்கிறார்கள். அதே சமயம் ரஜினி மிகவும் நெருக்கமான மாவட்டத்தலைவர்களிடம் மட்டும் கட்சி துவங்குவது குறித்து பேசியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர டிடிவி தினகரன் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார். அதற்கு காரணம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு புத்துயிர் ஊட்ட சசிகலாவின் முகம் அவசியம் என்று அவர் நினைக்கிறார். ஆனால் சசிகலாவை முன்கூட்டியே விடுவிப்பதற்கான அனைத்து கதவுகளையும் பாஜக ஏறக்குறைய அடைத்துவிட்டது.  இப்படி அதிமுகவை மையமாக வைத்து ஓபிஎஸ், இபிஎஸ், பாஜக, சசிகலா ஆகியோர் ஆளுக்கு ஒரு கணக்கு போட்டு காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் அக்டோபர் 7ல் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் அறிவிக்க உள்ள முடிவு தான் தமிழக அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். ஓபிஎஸ்சை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை தற்போது வரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அதே சமயம் பாஜக தரப்பில் இருந்து தனக்கு ஏதும் உதவிகள் கிடைக்குமா என்று ஓபிஎஸ் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் டெல்லியில் தனக்கு உள்ள தொடர்புகள் மூலம் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருப்பதாகவும், அமித்ஷாவிடம் பேச ஓபிஎஸ் அப்பாயின்மென்ட் கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால் பாஜக தரப்பில் இருந்து இந்த முறை ஓபிஎஸ் மகிழ்ச்சி அடையும் வகையில் எந்த தகவலும் வரவில்லை என்ற கூறுகிறார்கள். இதனால் ஓபிஎஸ் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அக்டோபர் 7க்கு முன்பாக தன்னுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முன்வரவில்லை என்றால் சீனியர் அமைச்சர்களை வைத்து தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிட்டு தேர்தல் பணிகளை தொடங்குவதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். அதாவது ஓபிஎஸ் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் அக்டோபல் 7ல் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியார் அறிவிக்கப்படுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதாவது அக்டோபர் 7ல் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியார் முடிசூட்டப்படுவார்.

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!