அந்த நாலு பேருக்காகவா ஆட்சி?: ஏக எரிச்சலில் எடப்பாடி டீம் அமைச்சர்கள்.

By thenmozhi gFirst Published Oct 29, 2018, 6:38 PM IST
Highlights

அ.தி.மு.க.வின் பிதாமகனான எம்.ஜி.ஆர்-க்கு தன் பட பாடல்களிலேயே மிகவும் பிடித்த பாடல்கள் என்று ஒரு லிஸ்ட் உண்டு. அதில் ஒன்றுதான் ‘நாலு பேருக்கு நன்றி! அந்த நாலு பேருக்கு நன்றி!’ எனும் பாடல். 

அ.தி.மு.க.வின் பிதாமகனான எம்.ஜி.ஆர்-க்கு தன் பட பாடல்களிலேயே மிகவும் பிடித்த பாடல்கள் என்று ஒரு லிஸ்ட் உண்டு. அதில் ஒன்றுதான் ‘நாலு பேருக்கு நன்றி! அந்த நாலு பேருக்கு நன்றி!’ எனும் பாடல். எடப்பாடியாரின் அரசியல் சினிமாவிலும் இந்த பாடல் மிக முக்கியம்தான் போலிருக்கிறது! 

அவர், ஒரு நான்கு பேருக்காகத்தான் ஆட்சியையே நடத்துகிறார் என்று பொங்குகிறார்கள் அவரது அமைச்சரவை மற்றும் அணி சகாக்களே. 

யார் அந்த நான்கு பேராம்?...இதை ராயப்பேட்டையிலிருக்கும் அ.தி.மு.க.வின் தலைமை கழக நிர்வாகிகளிடமே கேட்டால், ரகசியமாய் சொல்லும் லிஸ்ட் இதுதான்...’தங்கமணி! வேலுமணி! இவர்கள் இருவரையும் தன் நிழல்களாகவே நினைத்து எல்லா பிரச்னைகளையும், யோசனைகளையும் பகிர்ந்து கொள்கிறார். அவர்கள் இருவரும் தங்களின்  முழு சாணக்கியத்தனத்தையும் பயன்படுத்தி முதல்வரை பிரச்னை அண்டாமல் பாதுகாக்கிறார்கள். 

இதற்கு அடுத்து, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசுக்கும் தனக்கும் இடையிலான ஒரு இணைப்பு சங்கிலியாக நினைத்து அதீத மரியாதை மற்றும் சகோதரத்துவத்துடன் நகர்கிறாராம். மாநிலத்தையே நிர்வகிக்கும் மிக சவாலான பணியை முதல்வர் தயக்கமின்று செய்து முடிக்கவும், தடைகளை தாண்டிச் செல்லவும் கிரிஜாவின் வழிகாட்டுதல் பெரிது என்கிறார்கள். 

எடப்பாடியாரின் நான்காவது நம்பிக்கையாக ஜெயக்குமார் இருந்தார். ஆத்மார்த்தமாகவும், அதீத நட்பு ரீதியிலும் இவருடன் முதல்வர் நெருக்கமாக இருந்ததில்லை ஆனால்  ஆட்சி மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து பட்டையை கிளப்பும் அதிரடி மன்னனாக ஜெயக்குமார் விளங்கியதால் அவருக்கு ஏக சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்திருந்தாராம். ஆனால் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட சமீபத்திய பஞ்சாயத்துக்குப் பின் அவரை சற்றே தள்ளி வைத்துவிட்டார் முதல்வர். 

அவருக்குப் பதிலாக கடந்த சில நாட்களாக செங்கோட்டையனை நம்ப துவங்கிவிட்டார். செங்கோட்டையன் ஜமாய்ப்பாக டெல்லி போய் வந்ததன் பின்னணி இதுதான். இதுவரையில் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த செங்கோட்டையனை முதல்வர் கண்டு கொண்டதில்லை. ஆனால் இப்போது அவருடன் அதீத சிநேகம் காட்டுகிறார். தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் மூவருமே கொங்குப் புள்ளிகள் என்பதை மனதில் வையுங்க. 

இந்த நாலு பேருக்கு நெருக்கமான நிலையிலிருந்து எடப்பாடியார் ஆட்சி செய்ய, பன்னீர் அணியினர் மட்டுமில்லை எடப்பாடியார் அணியின் சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களே ‘இந்த நாலு பேருக்காகதான் ஆட்சியா?’ என்கிறார்கள். இந்த விமர்சனம் முதல்வரின் காதுகளிலும் விழுந்திருக்கிறது, ஆனாலும் அவர் அதே ரூட்டில்தான் தொடர்கிறார். இது எங்கேபோய் முடியுமோ!” என்கிறார்கள். 
ரைட்டு!
 

click me!