தோற்கும்போது பாஜக எடுக்கும் வழக்கமான உத்திதான் வருமான வரித் துறை ரெய்டு... ராகுல் காந்தி அட்டாக்..!

By Asianet TamilFirst Published Apr 2, 2021, 9:06 PM IST
Highlights
திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தும் நிலையில், ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். 

 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் வீட்டிலும் அவருடைய கணவர் சபரீசனின் அலுவலகத்திலும் அவருடைய நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதேபோல கலசப்பாக்கம் தொகுதியில் பணப் பட்டுவாடா புகார் எழுந்தது. இதனையடுத்து திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டிலும் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. இன்னொரு புறம் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் வீடு உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறையில் சோதனையில் ஈடுபட்டனர்.
திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் ஒரே நாளில் இந்த ரெய்டு நடந்ததால், திமுகவினர் கொந்தளித்து வருகின்றன. இதுகுறித்து திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்கும்போது, “வருமான வரித் துறை, சிபிஐ ஆகியவற்றை வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்றை மட்டும் நான் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக, மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்தச் சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். மிசா, எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை முறை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
வருமான வரித் துறையின் ரெய்டை திமுக கூட்டணி கட்சிகள் கண்டித்துவரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தோல்வியை எதிர்கொள்ளும்போது பாஜக கடைப்பிடிக்கும் வழிமுறைதான் எதிர்கட்சி மீதான வருமான வரித்துறை ரெய்டு” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
 

click me!