நீயா, நானா டீல்... விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு.. அதிமுகவில் அடுத்து என்ன..?

By Asianet TamilFirst Published Oct 7, 2020, 8:15 AM IST
Highlights

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைக்கும் விவகாரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே விடியவிடிய ஆலோசனைகள் நடைபெற்றன.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசாரமான விவாதம் நடந்தது. கூட்ட முடிவில் அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். தேனியிலிருந்து சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்து தீவிர ஆலோசனையில் இன்று ஈடுபட்டனர். இதேபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சி.பி. சண்முகம், தங்கமணி,  வெல்லமண்டி நடராஜன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.அன்பழகன், கடம்பூர் ராஜூ ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.


பகலில்  தீவிர ஆலோசனைகள் நடைபெற்றுவந்த வேளையில், இரவு 7.30 மணியளவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். முக்கால் மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக்குப் பிறகு 8.15 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்த அமைச்சர்கள் குழு துணை முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்படி அமைச்சர்களும், நிர்வாகிகளும் மாறிமாறி எடப்பாடி பழனிச்சாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துக்கொண்டிருந்தார்கள்.


ஓ. பன்னீர்செல்வத்துடனான சந்திப்பின்போது 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை வழிகாட்டுதல் குழுவை அமைக்காவிட்டால், கட்சி அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததாகத் தெரிகிறது. நள்ளிரவை கடந்தும் விடியவிடிய நான்கு முறைக்கு மேலாக, ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை மாறிமாறி நடைபெற்றது. நள்ளிரவைத் தாண்டியும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால். திட்டமிட்டப்படி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியாகுமா என கேள்வியும் எழுந்துள்ளது.
 

click me!