
அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும் என்றும், 2 மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் அரசியல் குறித்த ரகசியத்தை கமல் கூறியிருப்பார் என்றும் சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் ரஜினி பேசினார்.
நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பெருமக்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைக்கும் பெருமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் துணை முதலமைச்ச்ர ஓ.பன்னீர்செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றார்.
சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரர்களை கண்முன்னே காடடிய நடிகர் சிவாஜி கணேசன். கடவுள் மறுப்பு கொள்கை உச்சத்தில் இருந்தபோது, நெற்றியில் திருநீறு பூசி வெற்றி பெற்றவர் நடிகர் சிவாஜி என்று ரஜினி கூறினார்.
மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
சிவாஜி கணேசன் குடும்பத்தாரின் விடா முயற்சியால்தான் மணிமண்டபம் கட்டுவது சாத்தியமானது என்றும் உயிரிழந்த பிறகு சிலையாகுபவர்களுடன் பழகுவது பெருமையான விஷயம் என்றார்.
அரசியலில் சிவாஜியின் தோல்வி அவரது தொகுதி மக்களுக்கான தோல்வி. அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், எனக்கு தெரியாது. 2 மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் அரசியல் குறித்த ரகசியத்தை கமல் கூறியிருப்பார் என்றும் ரஜினி அப்போது பேசினார்.