ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு…. நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து மம்தா அதிரடி பேச்சு !!

First Published Jul 22, 2018, 8:28 AM IST
Highlights
west bengal cm mamtha speake about jayalaitha


ஜெயலலிதா மட்டும் இன்னேரம் உயிருடன் இருந்திருந்தால் மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான  வாக்கெடுப்பின்போது அதிமுக , பாஜகவுக்கு எதிராக வாக்களித்திருக்கும் என்றும் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி  மக்களவையில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. . இத்தீர்மானத்திற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

விவாதத்தில்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.பிரதமர் மோடியும் தனது பதிலுரையின்போது பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து  நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது  பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்று கூறினார்.

பாஜக அரசு கொண்டு வரும் தவறான திட்டங்களை எல்லாம் ஜெயலலிதா மிகுந்த தைரியத்துடன் எதிர்த்தார் என்று குறிப்பிட்ட மம்தா பானர்ஜி தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டாட்சி முன்னணி என்ற புதிய அணியை தொடங்கப்பட உள்ளதாகவும்,  கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நடைபெற இருக்கும் பிரமாண்ட பேரணிக்கு அந்த கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள்  என்றும் மம்தா கூறினார்.

மத்தியில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பணிகளை இந்த மாதமே தொடங்க இருக்கிறோம். இது அடுத்த மாதத்தில் இருந்து தீவிரம் அடையும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்..

click me!