
எதிர்கருத்து சொன்னதற்காக, தொலைபேசியில் தன்னுடைய சகோதரி, தாய் மற்றும் தோழியிடம் மிக மோசமான வார்த்தைகளில் தொடர்ந்து சிலர் பேசி வருவதாக தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். பல்வேறு சிக்கல்களைத் தாண்டி தீபாவளி அன்று இந்த படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் உள்நோக்கமாக கூட இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனின் அனுபவம் பேசுகிறது என்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து இடத்தை பிடுங்குபவர் திருமாவளவன் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்திருந்தார்.
திருமாவளவன் பற்றி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சௌந்தரராஜன் வீடு முன்பு அவரது உருவபொம்மையை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் எதிர்கருத்து சொன்னதற்காக, தொலைபேசியில் தன்னுடைய சகோதரி, தாய் மற்றும் தோழியிடம் மிக மோசமான வார்த்தைகளில் தொடர்ந்து சிலர் பேசி வருவதாக தெரிவித்தார்.
இது பற்றி தான் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்றும், இதனை எதிர்கொள்ள தானும், பாஜக தொண்டர்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் தாங்கள் நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்வதாகவும் தமிழிசை கூறினார்.