பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லாத மாணவி 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அந்த மாணவியை தொலைபேசியில் அழைத்து அம்மா இருந்தால் பேசியிருப்பார்கள்,
பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லாத மாணவி 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அந்த மாணவியை தொலைபேசியில் அழைத்து அம்மா இருந்தால் பேசியிருப்பார்கள், சின்னம்மா நான் இருக்கிறேன் என சசிகலா உருக்கமாக பேசியுள்ளார் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் நேரில் வந்து பார்க்கிறேன், எது வேண்டுமானாலும் கேள் வாங்கி வருகிறேன் என்றும் சசிகலா அந்த மாணவிக்கு வாழ்த்து கூறி ஆன்பு காட்டியுள்ளார். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மனசாட்சியாக நிழலாக வாழ்ந்து வருபவர் சசிகலா, சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சிறையிலிருந்து விடுதலையாகி வந்துள்ள அவர், மீண்டும் கட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆன்மிக பயணம் அரசியல் பயணம் என பிசியாக இருந்து வரும் அவர், செல்லுமிடங்களில் தனது கட்சித் தொண்டர்களை, ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஏழை எளிய மாணவிகள் அவரை நேரில் சந்தித்து உதவி கோரி வருகின்றனர். அவரும் அவர்களை கரிசனையுடன் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த வரிசையில் மயிலாடுதுறையை சேர்ந்த பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லாத, பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி லட்சுமி தன்னம்பிக்கையுடன் படித்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.ஆசிரியரின் உதவியுடன் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து வாழ்த்து தெரிவித்து மாணவிக்கு ஊக்கம் அளித்துள்ளார். இளம் மாணவர்கள் மாணவி லட்சுமியை பார்த்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
இதற்கிடையில் அந்த மாணவியை தொலைபேசியில் அழைத்த வி.கே சசிகலா, அந்த மாணவியுடன் அன்பாக உரையாடியுள்ளார். அம்மா இல்ல சின்னம்மா தான் இருக்கேன் என மகிழ்ச்சியுடன் ஊக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- பனி ரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறாய், அம்மா இருந்திருந்தால் உன்னிடம் பேசி இருப்பார்கள், அம்மா இல்லை அதனால் அவரின் தங்கையாக சின்னம்மா நான் பேசுகிறேன்.
துணிவுடன் தைரியமாக இருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம், அதற்கு நீயே உதாரணம். எனவே மேற்கொண்டு நன்றாக படி, இந்த மாதம் இறுதியில் நான் அங்கு வருகிறேன், வரும்போது நான் உன்னை நேரில் சந்திக்கிறேன். எது வேண்டுமானாலும் சொல், நான் வாங்கி வருகிறேன், வரும் போது நேரில் வந்து உங்கள் அனைவரையும் பார்க்கிறேன் என கூற அந்த மாணவி அவரின் வார்த்தைகளே கேட்டு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளார். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.