இந்த தேசத்தில் கட்சிகள் துவங்குவதற்கு எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்க காரணங்கள் இருந்திருக்கின்றன. சுதந்திரம், சுயராஜ்ஜியம், பகுத்தறிவு, மத பாதுகாப்பு, கொள்கை கோட்பாடு என்று எத்தனையோ உன்னத காரணங்கள். ஆனால் தே.மு.தி.க. பிறந்த கதையே தனி!...
மேம்பால பணிகளுக்காக தனது மண்டபம் இடிபட்டதால் ஆளுங்கட்சி மீது ஆவேசம் கொண்டு துவக்கப்பட்டதுதான் அந்த கட்சி!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் ‘ஆண்டாள் அழகர்’ எனும் பெயரில் விஜயகாந்துக்கு கல்யாண மண்டபம் இருந்தது. அந்த இடத்தில் பெரிய மேம்பாலம் உருவாக இருந்த நிலையில், மண்டபத்தின் ஒரு பகுதியை இடிக்க வேண்டிய நிலை வருவதாக மேப் சொல்லியது.
தன்னை கருணாநிதியின் ஒரு மகனாகவே பாவித்து வலம் வந்த விஜயகாந்த், மாற்று வரைபடத்தை தயார் செய்து காட்டினார். ம்ஹூம் வேலைக்கு ஆகவில்லை. அந்த துறையின் மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலு எதற்கும் மசிவதாய் இல்லை. விளைவு 2005-ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவக்கினார் விஜயகாந்த்.
undefined
‘இதுவரைக்கும் என்னை உங்க நண்பனாகத்தானே பார்த்திருக்கீங்க! இனிமே எதிரியா பார்ப்பீங்க!’ என்று தி.மு.க.வுக்கு சவால் விட்டபடி கட்சியை உசுப்பியவர் அரசியலில் அதிரிபுதிரியாக வளர்ந்தார். தி.மு.க. ஆதரவு நிர்வாக அரசு இடித்தது போக மிச்சமிருந்த மண்டப கட்டிடத்தையே தன் கட்சி அலுவலகமாக்கினார். தேர்தலை எதிர்கொண்டார்.
ஒரு எம்.எல்.ஏ.வுடன் ஆரம்பமாகிய தே.மு.தி.க.வின் கணக்கு அடுத்த தேர்தலில் இருபத்து ஒன்பதானது. எதிர்கட்சி தலைவரானார், இருபெரும் திராவிட கட்சிகளையும், மிரள விட்டார், அ.தி.மு.க. ஆளுங்கட்சியாவதற்கு முக்கிய காரணமானார், தி.மு.க. மீண்டும் தோற்பதற்கு மையக்கருவாகி போனர். இப்படி எத்தனை எத்தனை சாதனைகளையோ புரிந்தார் அரசியலில்.
ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இவர் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுடன் மல்லுக்கட்டி, அமைச்சர்களிடம் நாக்கை துருத்த, ‘இனி தே.மு.தி.க.வுக்கு அழிவுகாலம்தான்.’ என்று எந்த முகூர்த்தத்தில் ஜெ., வாழ்த்தினாரோ தெரியவில்லை, சரசரவென சரிவை சந்தித்த விஜயகாந்த் கட்சி இதோ இப்போது வரை எழுந்திருக்கவேயில்லை. கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாஷ் அவுட் ஆகியிருக்கிறது அக்கழகம்.
இது போதாதென்று தே.மு.தி.க.வின் உயிர், உடல், பொருள், ஆவி அனைத்துமாக இருந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த சில காலமாக மிகவும் உடல் நலம் குன்றி இருக்கிறார், அந்தரத்தில் பறந்து பின்னங்காலால் கிக் செய்து நடித்தவருக்கு இப்போது நான்கு அடி தூரம் நடப்பதே அதிசயமாகிவிட்டது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வுக்கு எதிராக சிங்கமாக கர்ஜித்தவரால் இப்போது தன் பெயரை கூட தெளிவாய் உச்சரிக்க முடியவில்லை. ஒரு முறை அமெரிக்கா சென்று ட்ரீட்மெண்ட் எடுத்தார்! பலனில்லை. இப்போது மீண்டும் அங்கே பறந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட கோமா நிலைக்கு சென்றுவிட்ட தே.மு.தி.க.வை உசுப்பி எழுப்பும் முயற்சியாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அக்கட்சியின் பொருளாளராகி இருக்கிறார். மூத்த மகன் விஜய பிரபாகரனோ மெதுவாக அரசியலி எட்டிப்பார்க்கிறார். ஆனால் கேப்டனின் இடத்தில் இவர்களை ஒரு சதவீதம் கூட ஏற்றுக் கொள்ள அக்கட்சியினர் தயாராக இல்லை.
சூழல் இப்படி இருக்கும் நிலையில், கோயம்பேடு வழியாக செல்ல இருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தால் விஜயகாந்தின் கட்சி அலுவலகம் இடிபட போகிறதாம். இது பற்றி பேசும் மெட்ரோ ரயில் நிர்வாக தரப்பு “ஆம், விஜயகாந்த் கட்சி அலுவலகம் இருக்கும் இடத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் வரும் காளியம்மன் கோயில் ரயில் நிலையம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் விரைவில் வழங்கப்படும். அவர்கள் தரப்பில் எதிர்ப்பு இருந்தால் பதிவு செய்யலாம். ஆனால் டெண்டர் பணிகள் இன்னும் சில மாதங்களில் துவங்கும்.” என்று உறுதியாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்த தகவலை கேட்டு ஒட்டு மொத்த தே.மு.தி.க.வும் உறைந்து போயுள்ளதாம். ’மேம்பாலத்தால் துவங்கிய கட்சி, மெட்ரோவினால் முடிந்து போய்விடுமோ!’ என்று பதறுகிறார்கள். மேம்பாலத்துக்காக மண்டபம் இடிக்கப்பட்ட போது விஜயகாந்த் முழு எனர்ஜியுடன் துடிதுடிப்பாய் இருந்தார். ஆனால் இப்போதோ அவரால் நிற்க கூட முடியவில்லையே!
இதுதான் அவர்களின் வருத்தம்.