கொள்ளையடித்த பணம் தன்னை காக்கும் என நினைக்கிறாரா விஜயபாஸ்கர்...? சாபம் விடும் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு..!

Published : Jun 16, 2020, 05:23 PM ISTUpdated : Jun 16, 2020, 06:24 PM IST
கொள்ளையடித்த பணம் தன்னை காக்கும் என நினைக்கிறாரா விஜயபாஸ்கர்...? சாபம் விடும் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு..!

சுருக்கம்

கொரோனா பேரிடரிலும் 'அரசியல்' செய்யும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர்வது மக்களின் சாபக்கேடு என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.

கொரோனா பேரிடரிலும் 'அரசியல்' செய்யும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர்வது மக்களின் சாபக்கேடு என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறி வருவதாக எங்கள் கழகத் தலைவர் கூறுவது முற்றிலும் தவறானது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுவதற்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்பதைச் சற்று அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.

டிரான்ஸ்பர்களுக்கு மாமூல் வாங்கி கவரில் பணத்தைப் போட்டு வைத்து விட்டு மறைக்க ஆடும் நாடகம் போன்றது அல்ல இந்த கொடிய கொரோனா நோய்! மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது. தினமும் செத்துமடியும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை விஜயபாஸ்கர் இவ்வளவு மரணங்களுக்குப் பிறகும் தெரிந்து கொள்ளவில்லை என்றால், இவரைத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பெற்றது முதல் பாவம்!

விஜயபாஸ்கர் ஊழல் மயக்கத்தில் இருக்கிறார். மருந்து, மருத்துவ உபகரணங்கள், அதிவிரைவு பரிசோதனை கிட், நியமனங்கள் ஆகியவற்றில் அடித்த பணம் அவரது கண்ணை மறைக்கிறதா? அல்லது அடித்த கமிஷனில் இதுவரை செலுத்தி வரும் கப்பம் தன்னை காக்கும் என்று நினைக்கிறாரா? கொரோனா நோய் சிகிச்சைக்கு மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஜனவரி 7-ம் தேதியே எழுதிய கடிதத்தைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு இன்றுவரை முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பது யார்?

சாட்சாத் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், முதலமைச்சரும்தான் என்பதை மறுக்க முடியுமா? அனைவரும் முகக்கவசம் போட வேண்டிய அவசியமில்லை” என்று வாய் கிழியப் பேட்டி கொடுத்தது யார்? விஜயபாஸ்கர்தான்! தமிழகத்தில் உள்ள யாருக்கும் கொரோனா நோய்த் தொற்று இல்லை, மதுரையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரின் தொடர்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே சமூகப் பரவல் இதோ வருகிறது; அதோ வருகிறது என்று கூறி அதிவிரைவு பரிசோதனை கருவிகளை வாங்காமல் மூன்று மாதங்கள் தூங்கியது. 236-க்கும் மேற்பட்ட கொரோனா மரணத்தை வெளியிடாமல் மறைத்தது. சென்னை மாநகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையின் டீன் விடுமுறையில் சென்றது. அங்கு ஒரு மூத்த செவிலியர் கொரோனா நோய்க்குப் பலியானது. எல்லாம் யார் துறையில் நடந்தது? விஜயபாஸ்கர் துறையில்தானே!

ஏன் இன்றைக்குத் தனது துறைச் செயலாளரைக் கூட சரிவர வழிகாட்ட முடியாமல், அவரை டிரான்ஸ்பரில் இருந்து காப்பாற்றவும் முடியாமல் தவிப்பது யார்? விஜயபாஸ்கருக்கு கொஞ்சமாவது சுயமரியாதை இருக்குமென்றால், நிர்வாகத் தோல்விக்காக தன் துறை செயலாளர் மாற்றப்பட்டவுடன் தானும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போயிருக்க வேண்டும்.

ஊழலும், பதவியும் தன் உடம்போடு ஒட்டிப் பிறந்துவிட்டதால் தன்மானத்தை கடன் கொடுத்து விட்டு, கமிஷனே கதி என்று இருக்கும் விஜயபாஸ்கர் எங்கள் தலைவரைப் பார்த்து உளறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் கழகத் தலைவர் துவக்கத்திலிருந்து, அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். எங்கள் தலைவர் வைத்த கோரிக்கைகளையே ஒவ்வொன்றாக காலதாமதமாக இன்றைக்கு அ.தி.மு.க. அரசு செய்து வருகிறதே தவிர, சுயமாக ஒரு முடிவையும் இதுவரை எடுத்து அறிவிக்கவில்லை.

நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுடனான காணொலிச் சந்திப்பில் அரசின் தோல்விகளை அடுக்கடுக்காக எங்கள் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் ஒன்றுக்குக் கூட இதுவரை அமைச்சர் திரு. விஜயபாஸ்கரோ, முதலமைச்சரோ பதில் சொல்ல முடியவில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். ஈவு இரக்கமின்றி 236 கொரோனா உயிர்ப் பலிகளை மறைத்து விட்டு, சென்னையில் நோய்த் தொற்று, ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்த அன்று , “வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது”என்று அபாண்டமான பொய்யை விஜயபாஸ்கர் அவிழ்த்து விட்டிருக்கிறார்.

நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,504. அதில் சென்னையில் மட்டும் 33,244. ஏன் அமைச்சரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் 62. இந்த நிலையில் அமைச்சர் “வைரஸ் கட்டுப்பாட்டில்”இருக்கிறது என்கிறார். இந்தப் பேட்டியை எந்தப் பக்கமாக திரும்பிக் கொண்டு சிரிப்பது? கொரோனா நோய்த் தொற்றின் ஆரம்பத்திலிருந்து மருத்துவர்களுக்கு, தூய்மை பணியாளர்களுக்கு, சுகாதாரப் பணியாளர்களுக்கு- ஏன் காவலர்களுக்கு முகக்கவசங்கள் உள்ளிட்ட கிருமி நாசினிகளைத் தானே சென்று வழங்கி- அவர்களின் சுயபாதுகாப்பை உறுதி செய்ய எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பாடுபட்டவர் எங்கள் கழகத் தலைவர்.

ஆனால், அமைச்சரோ அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல், நூற்றுக்கணக்கான மருத்துவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் கொரோனா நோய்த் தொற்றில் சிக்கி அவதிப்பட வித்திட்டவர். தனது ஊழலை- தனது தோல்வியை- அ.தி.மு.க. அரசின் அப்பட்டமான தோல்வியை மறைக்க, குடும்ப உறவுகளையும், சுகங்களையும் மறந்து இரவு பகல் என்று பாராது கொரோனாப் பணியாற்றும் முன்களப் பணியாளர்களின் தியாகத்தை தயவுசெய்து கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திரும்பவும் சொல்கிறேன்; சட்டமன்றத்தைத் தொடர்ந்து நடத்தியும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமலும், “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் கொடுத்த மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், அரசியல் செய்தது அ.தி.மு.க. ஆட்சிதான். கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்த கழகத்தினரைப் பொய் வழக்குப் போட்டு கைது செய்து அரசியல் பண்ணியது அ.தி.மு.க. ஆட்சிதான். ஏன், மருத்துவப் படுக்கை இல்லாமல் தவிக்கிறார்கள் என்று பதிவிட்டதற்காகச் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குப் போட்டு அவரை எச்சரித்தது இதே அமைச்சர் திரு. விஜயபாஸ்கர்தான்!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் “மறுபடியும்” முழு ஊரடங்கு போடும் அளவிற்கு- படுதோல்வி அடைந்து- நிராயுதபாணிகளாக நிற்பது அ.தி.மு.க. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அவருக்குத் தலைவராக இருக்கும் மாநில பேரிடர் மேலாண்மை தலைவர் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும்தான். தமிழக மக்களைப் பாதித்துள்ள சமூகப் பரவல், நோய்த் தொற்றுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை, பரிசோதனைக் கருவிகள் கொள்முதல், குணமாகித் திரும்புவோரின் கணக்கு, இறந்தவர்கள் எண்ணிக்கை அனைத்திலும் குளறுபடி செய்து- மறைத்து- திரித்து வெளியிட்டு கொரோனா பேரிடரிலும் “அரசியல்” செய்யும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருப்பது மக்களின் சாபக்கேடு.

முழுக்க முழுக்க அரசியல் பண்ணிவிட்டு- அரசு கஜானாவை கொரோனா பேரிடரிலும் சுரண்டிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு தி.மு.க.,வைப் பார்த்தோ, தி.மு.க. தலைவர் எங்கள் தளபதியைப் பார்த்தோ “அரசியல் செய்கிறார்கள்” என்று சொல்லும் தகுதி எள் அளவு அல்ல- எள் முனையளவும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிலும் குறிப்பாக “கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து”பேட்டியளிப்பதில்- எனக்கு விளம்பரமா, உங்களுக்கு விளம்பரமா என்பதில் போட்டிப் போட்டுக் கொண்ட- ஊரே சிரிக்கும் அரசியல் செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும்,  அவரது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித தகுதியும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்’’என அவர் விமர்சித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?