சர்கார் அரசியல் போஸ்டர்! கோடு போட்ட எஸ்.ஏ.சி! ரோடு போட்ட ரசிகர்கள்!

By sathish kFirst Published Nov 6, 2018, 11:56 AM IST
Highlights

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது தான் தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாலும் கூறினார்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது தான் தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாலும் கூறினார் விஜய் ரசிகர்கள் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து சர்கார் வெளியீட்டை ஒரு அரசியல் நிகழ்வு போன்று சித்தரித்து பட்டையை கிளப்பி வருகிறார்கள்.

நெல்லை தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு சென்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர் விஜய் தற்போது இருக்கும் உயரத்திற்கு காரணம் தமிழக ரசிகர்கள் தான் என்றார். அப்படிப்பட்ட தமிழ் மக்களுக்கு விஜய் ஏதாவத திரும்ப செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் எஸ்.ஏ.சி கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் சர்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகியுள்ளது. வழக்கமாக விஜய் படம் ரிலீஸ் ஆகும் போது பேனர், போஸ்டர், கட் அவுட் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். ஆனால் இந்த முறை சர்கார் வெளியீட்டிற்கு விஜய் ரசிகர்கள் வேறு மாதிரியான கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதாவது சர்கார் திரைப்படம் வெளியாகும் திரையரங்ககள் முன்னிலையில் ஆர்ச்சுகள் அமைப்பது விஜய் ரசிகர்களின் வழக்கமான கொண்டாட்டம்.

ஆனால் இந்த முறை திரையரங்க வாயிலில் சென்னை ஜெயின் ஜார்ஜ் கோட்டை போன்ற அமைப்பை பல்வேறு நகரங்களில் அமைத்துள்ளனர். இது போதாக்குறைக்கு 1972ல் எம்.ஜி.ஆர் செய்தது இரு விரல் புரட்சி 2018ல் விஜய் செய்யப்போவது ஒரு விரல் புரட்சி என்று அரசியல் நெடி வீசும் வாசகங்களுடன் பல்வேறு நகரங்களில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படுகின்றன. இப்படி விஜய் ரசிகர்கள் அனைவரும் ஒரு கட்சியின் தொண்டர்கள் போல சர்கார் படத்தை வரவேற்க தயாராகியுள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது வழக்கமாக விஜய் ரசிகர்கள் பட வெளியீட்டின் போதும் சரி வேறு நிகழ்ச்சிகளின் போதும் சரி தாங்கள் அமைக்கும் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்களுக்கு விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். புஸ்ஸி ஆனந்த் விஜயின் தந்தை எஸ்.ஏ.சியிடம் கலந்து பேசி போஸ்டர்களுக்கு அனுமதி கொடுப்பார்கள் என்று சொல்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது விஜய் ரசிகர்கள் அடித்துள்ள அத்தனை போஸ்டர்களும், அவர்கள் வைத்து கோட்டை போன்ற நுழைவு வாயில்களும் எஸ்.ஏ.சி ஒப்புதலுடனேயே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு சில அம்சங்களை கூறி அதன்படி போஸ்டர் அடிக்கும் படி உத்தரவு சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் மகனை வைத்து அரசியல் ஆட்டம் ஆட விரும்பும் எஸ்.ஏ.சி தற்போது சர்கார் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை அதற்கு தயார் படுத்தி வருவதாகவே தெரிகிறது. விஜய் ரசிகர்களும் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருப்பதும் புலனாகிறது.

click me!