இதெல்லாம் உதவாக்கரைகளுக்காகவே உருவாக்கப்பட்டது... தெறிக்கவிடும் வேல்முருகன்!!

By sathish kFirst Published Jun 6, 2019, 1:35 PM IST
Highlights

மோசடித் தேர்தல் போலவே மோசடித் தேர்வு! அதனால் தமிழக மாணவிகள் இந்த ஆண்டும் சாவு! நீட் பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்!  அதனை நாம்தான் செய்தாக வேண்டும்! என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

மோசடித் தேர்தல் போலவே மோசடித் தேர்வு! அதனால் தமிழக மாணவிகள் இந்த ஆண்டும் சாவு! நீட் பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்!  அதனை நாம்தான் செய்தாக வேண்டும்! என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த மே 5ந் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் நடைபெற்றது. இப்போது ஜூன் 5ந் தேதி தேர்வு முடிவு வெளியானது. 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடந்ததுபோல் இந்த ஆண்டும் தமிழக மாணவிகள் உயிர் விட்டனர்.

திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ரிதுஸ்ரீ; தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா;! நீட்டில் தோற்றதால் தூக்கிட்டும், தீயிட்டும், தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.

இத்தனைக்கும் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவிகள் இருவரும். அந்த தன்னம்பிக்கையால்தான் நீட்டை எதிர்கொண்டனர். ஆனால் சூழ்ச்சி, சதி, வஞ்சகமே உருவான நீட் இவர்களின் தன்னம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. ஆம். திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கொலைக்கருவிதான் நீட்! சாதி, மதம், மொழி, இனம், வர்க்கம், நகரம், கிராமம் என்கின்ற பல்வேறு வகைப்படுத்தல்களால் சமூகப் பிளவுகளை நிலைநிறுத்தும் திட்டத்துடன் உருவாக்கப்பட்டது.

டெல்லியைத் தலைமையகமாகக் கொண்ட மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம்தான் (சிபிஎஸ்சி) நீட் தேர்வை நடத்துகிறது. எனவே சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வே நடத்தப்படுகிறது. அதனால்தான் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகம் பேர் வெற்றி பெற முடிகிறது. மாநிலக் கல்வி வாரியப் பாடத்திதிட்டத்தில் படித்தவர்கள் அதிகம் பேர் வெற்றி பெற முடியாமல் போகிறது.

நாடு முழுவதிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைதான் மிக மிக அதிகம்.  அப்படியிருந்தும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில்தான் நீட் நடத்தப்படுகிறது என்றால் அது திட்டமிட்ட சதியன்றி வேறென்ன? 

குறிப்பாக, மேல்சாதி என்கின்ற ஒரு மைக்ரோ சிறுபான்மையர் மற்றும் மேல்தட்டு, மேட்டுக்குடி என்கின்ற பணக்காரர் ஆகியோருக்காகத்தான் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் நீட் தேர்வு! நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எப்படி? அவை சிந்தனை முறைப்படியானதில்லை. ஆம் - இல்லை, சரி - தவறு என்று பதில் சொல்லும்படியான கேள்விகளே. இதற்கு கணினியே போதும், மனிதன் தேவையில்லை. இப்படி எதற்கும் உதவாத தேர்வு. உழைக்கும் வர்க்க மாணவர்களை ஒதுக்கிவிட்டு உதவாக்கரைகளுக்காகவே உருவாக்கப்பட்ட தேர்வு!

தேர்வு ஒழுங்காக நடத்தப்படுகிறதா என்றால், அதுவும் திட்டமிட்டபடி மோசடியாகவே நடத்தப்படுகிறது. ஒரே பாடத்திட்டத்திலிருந்துதான் கேள்விகள் என்றாலும் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே கேள்வித்தாள் இல்லை. இந்தி மாணவர்களுக்கு இலகுவான கேள்வித்தாள். தமிழ் மாணவர்களுக்கு கடினமான கேள்வித்தாள். 
மேலும் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவர்களுக்கு உளவியல் தாக்குதல்கள். தேர்வு மையங்களை தொலைதூர மாநிலங்களில் போட்டு, ஹால் டிக்கெட்டையும் லேட்டாக வழங்கி தேர்வெழுதவே போகவிடாமல் செய்யும் தந்திரம் வேறு. இது 19ஆம் நூற்றாண்டில் கூட சூத்திரர், பஞ்சமர் மற்றும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதைப் போன்றதே.

நீட் தேர்வில் மோசடி மட்டுமல்ல ஊழலும் நடக்கிறது. சிபிஎஸ்சியோ, இந்திய மருத்துவக் கவுன்சிலோ புனிதர்களல்ல. இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதன் தேசாய் கதை நாடறிந்ததே. அவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் லட்சம் கோடிகள். கைப்பற்றப்பட்ட தங்கம் பலநூறு கிலோக்கள். எல்லாம் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்க பெறப்பட்டவை. சிபிஎஸ்சியும் பணத்துக்கு மதிப்பெண் வழங்குவதாக வடக்கில் ஒலிக்கின்றன குரல்கள்.

பள்ளிகளில் படித்தாலும் நீட்டிற்கென்று தனிப் பயிற்சி எடுத்தால்தான் ஆயிற்று. பயிற்சிக் கட்டணமோ இலட்சக்கணக்கில். அப்படியென்றால் பள்ளிப்படிப்பே அர்த்தமற்றதாகிறது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில்தான் தேர்வு என்பதால் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளை விடுத்து சிபிஎஸ்சி பள்ளியை நோக்கும் நிலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் மோடியின் விருப்பப்படி மும்மொழித் திட்டத்தையும் திணிக்க முடியும்; மாநிலங்களையும் ஒழித்துக்கட்ட முடியும்.

14,10,754 பேர் நீட் எழுதியதில் 8 லட்சம் பேர் தேறினர். இதில் பட்டியல் இனத்தவர் 20,000 பேர்; பிற்படுத்தப்பட்டோர் 63,749 பேர்; மேல்சாதியினரோ 7,04,335 பேர். தேர்வு விழுக்காடு, தமிழகம் 48.57; கேரளா 66.59;  கர்நாடகா 63.25;  ஆந்திரா 70.72; டெல்லி 74.92; மே.வங்கம் 73.44; ஹரியானா 73.41; சண்டிகர் 73.24. உ.பியும் கூட 74 சொச்சம்.

ஆக, மேல்சாதியினர் தேர்வு எண்ணிக்கைக்கும் மற்றவர்கள் தேர்வு எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமானது. அதேபோல் படிப்பறிவில் குறைந்த இந்தி மாநிலங்களின் தேர்வு விழுக்காட்டை, படிப்பறிவு மிக்க தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் எட்டவே முடியவில்லை.

இதிலிருந்து தெரிவது என்ன? பாஜகவும் மோடியும் திட்டமிட்டபடி தங்கள் இலக்கை எட்டியிருக்கிறார்கள் என்பதுதான்! இதற்காகத்தான் அனிதா தொடங்கி இன்றைக்கு மூன்று பேர் என நம்மவர் உயிரைப் பறித்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, முன்பிருந்தது போல், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதுதான். ஆனால் மோடியோ மாநிலத்தையே ஒழித்துக்கட்டுவதில் இறங்கியிருக்கிறார். உலகிற்கே ஒவ்வாத, அருவருப்பான ஒரு சனாதனியாய், அறிவியலுக்கும் சட்டத்துக்கும் புறம்பாக இத்தகைய இழிசெயலில் இறங்கியிருக்கிறார். இதை நாம் விட்டுவிட முடியாது. முறியடித்தாக வேண்டும்.

மோசடித் தேர்தல் போலவே மோசடித் தேர்வு!  அதனால் தமிழக மாணவிகள் இந்த ஆண்டும் சாவு! நீட் பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்!  அதனை நாம்தான் செய்தாக வேண்டும்! வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

click me!