"மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்" - எச்சரிக்கிறார் வைகோ!!

Asianet News Tamil  
Published : Jul 01, 2017, 10:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
"மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்" - எச்சரிக்கிறார் வைகோ!!

சுருக்கம்

vaiko warning kathiramangalam protest

மக்கள் எழுச்சியை சர்வாதிகார போக்குடன் ஒடுக்கிவிடலாம் என்று கருதுவதும் சரியான அணுகுமுறை அல்ல என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தனது அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் இயற்கை மற்றும் எரிவாயுக் கழகம், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள குழாய்கள் பதிக்கும் பணியைச் செய்துள்ளது. இதற்கிடையில், கதிராமங்கலத்தில் ஏற்கனவே எரிவாயு எடுக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது ஹைட்ரோ கார்பன் ஆய்வை மேற்கொள்ளும் ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்த வேண்டும் என்று கடந்த மே மாதம் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தனர்.

ஆனால் கடந்த ஜூன் 2ம் தேதி காவல்துறையினர் புடைசூழ ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீண்டும் ஆய்வுப் பணிகளை தொடங்கியபோது பொதுமக்களும், தாய்மார்களும் அறப்போராட்டங்களில் இறங்கினர். அப்போது காவல்துறை தடியடி நடத்தி பொதுமக்கள் 500 பேரை கைது செய்தது. போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தற்போது கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பதித்த குழாய் உடைந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

எரிவாயு என்ற பெயரால் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பசுமை வளம் கொழிக்கும் தங்கள் பகுதி விவசாயம் அழிந்து நாசமாகும் என்று பொதுமக்களும், தாய்மார்களும் ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மண்ணைப் பாதுகாக்கப் போராடும் கதிராமங்கலம் மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தி உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஏழரை கோடி மக்களின் நியாயமான உணர்வுகளை அலட்சியப்படுத்தி, மக்கள் போராட்டத்தை கிள்ளுக் கீரையாகக் கருதி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது.

கடந்த 2017 மார்ச் 26ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல்வேறு நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டபோதே தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். தமிழக அரசின் மெத்தனப் போக்குதான் மத்திய அரசு தமிழ்நாட்டைத் துச்சமாக நினைப்பதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ அல்லது ஓ.என்.ஜி.சி. மூலம் மறைமுகமாகவோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் எரிவாயு திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் கொந்தளித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து காவல்துறையை ஏவி அடக்குமுறை தர்பார் நடத்த முற்படுவதும், மக்களை மிரட்டுவதும் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.

மக்கள் எழுச்சியை சர்வாதிகார போக்குடன் ஒடுக்கிவிடலாம் என்று கருதுவதும் சரியான அணுகுமுறை அல்ல என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் கிளர்ச்சி விசுவரூபம் எடுக்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?
ஈரானை சிதறடிக்க டைம் குறித்த அமெரிக்கா.. பச்சை கொடி காட்டிய சவுதி அரேபியா.. துடிக்கும் இஸ்ரேல்..!